Skip to main content

தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
Tuticorin district school, college holiday notice

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள், கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் மாநிலப் பேரிடர் மீட்புக் குழு, தேசியப் பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புத்துறை, காவல்துறையினர் மற்றும் அனைத்து அரசுத் துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதே சமயம் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. தற்போது பல இடங்களில் வெள்ள நீர் வடியத் துவங்கியுள்ளது. இந்நிலையில், வெள்ள பாதிப்பு காரணமாகத் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் (21.12.203) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதே சமயம் தென்காசி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளதால் நாளை (21.12.2023) வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (21.12.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது எனவும் முகாம்கள் ஏதும் நடைபெறாத கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் வெள்ளிக்கிழமை முதல் படிப்படியாகப் பள்ளிகள் திறக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் கா.ப. கார்த்திகேயன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Incident on school chanting Jai Sriram  Shocking video released in telangana

தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .

மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Holiday notification for Chennai High Court

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதோடு மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள், தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி இருந்தது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவை ஒட்டி ஏப்ரல் 19 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்றப் பதிவாளர் எம்.ஜோதிராமன் உத்தரவுப்படி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல், தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உட்பட்ட விளவங்கோடு தொகுதியின் இடைத்தேர்தல் ஆகியவற்றின் காரணமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உயர் நீதிமன்றத்தின் சென்னை மற்றும் மதுரை ஆகிய இரு அமர்வுகளுக்கும் விடுமுறை நாள் ஆகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.