தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டிற்கு கடந்த மாதம் 27 ஆம் தேதி (27.01.2024) அரசு முறை பயணம் மேற்கொண்டார். ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தினார். இதனையடுத்து பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஸ்பெயின் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை புறப்பட்டு இன்று காலை 08.00 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் பொன்முடி ஆகியோர் உடன் இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “ஸ்பெயின் நாட்டில் செயல்படக்கூடிய முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை தனித்தனியாக நேரில் சந்தித்து பேசினேன். அப்போது அவர்களிடம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டேன். அதன்படி ரோக்கா, ஹபக் லார்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
எனவே முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஸ்பெயின் பயணம் சிறப்பாக அமைந்தது. மொத்தம் ரூ. 3 அயிரத்து 440 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்பெயினில் வசிக்கும் தமிழர்களையும் சந்தித்தேன். பிரதமர் மோடியின் நாடாளுமன்ற பேச்சை பார்த்தேன், ரசித்தேன், சிரித்தேன். காங்கிரஸ்தான் ஆளுங்கட்சி போலவும், பாஜக எதிர்க்கட்சி போலவும் மோடி பேசியிருக்கிறார் ” எனத் தெரிவித்தார்.