Skip to main content

‘நாதக ஒரு பிரிவினைவாத இயக்கம்’ - திருச்சி எஸ்.பி.யின் பேச்சால் பரபரப்பு!

Published on 05/12/2024 | Edited on 05/12/2024
Trichy SP Varun Kumar says that NTK is a separatist movement

கடந்த 2023 ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக வருண்குமார் ஐ.பி.எஸ் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வந்திதா பாண்டே புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் உதவி ஆய்வாளர் அருண் கொடுத்த புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில்  வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எஸ்.பி. வருண்குமார் சாதிப்பாகுபாடு பார்ப்பதாகக் குற்றம்சாட்டியிருந்தார். அதன்பிறகு எஸ்.பி.வருண்குமாருக்கு எதிராக சமூக வலைதளங்களில் ஆபாச கருத்துகள் பகிரப்பட்டுவந்தது. இந்த செயலில் நாதகவினரின் பங்கு இருப்பதாக எஸ்.பி.வருண்குமார் குற்றம்சாட்டினார். இதனைத் தொடர்ந்து, எஸ்.பி வருண்குமாருக்கு எதிராக நாதக கட்சி நிர்வாகிகளான சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி ஆகியோர் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்திப் பேட்டியளித்தனர்.

பின்னர், சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட ஆபாச  கருத்துகள் குறித்து எஸ்.பி வருண்குமார், ஆகஸ்ட் 22 ஆம் தேதி திருச்சி தில்லை நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பெயர் தெரியாத 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்த விசாரணை நடைபெற்று வருகிறது. 

Trichy SP Varun Kumar says that NTK is a separatist movement

இந்நிலையில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் 5வது தேசிய ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாநாட்டை சண்டிகரில் நேற்று முன் தினம்(5.12.2024) தொடங்கி வைத்தனர். இந்த மாநாட்டில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளம் ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான திருச்சி எஸ்பி வருண்குமாருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்திருந்தது. மேலும், சைபர் கிரைம் துறையில் தற்போதுள்ள சவால்கள் குறித்து அமைக்கப்பட்ட, 22 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் குழுவுக்குத் தலைமையேற்று, அவரை உரையாற்றவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய எஸ்.பி வருண்குமார், “தமிழகத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியினர், பல்வேறு சமூக ஊடகங்களின் வாயிலாக தமிழகத்தில் இருந்து கொண்டே வெளி மாநிலங்கள், வெளிநாடுகளின் இருப்பது போல் இணையதளங்கள் வாயிலாக பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். நாம் தமிழர் இயக்கம் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவு இயக்கம். குற்றச்செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்ட நாம் தமிழர் இயக்க நிர்வாகிகள் மீது, சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக, தன்னையும், ஐ.பி.எஸ் அதிகாரியான தன் மனைவி மற்றும் குழந்தைகளை ஆபாசமாக சித்தரித்து எக்ஸ் வலைதளம் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இவையனைத்தையும் வெளிநாடுகளில் இருப்போரை வைத்துச் செய்துள்ளனர். இதுகுறித்து முறையாக புகார் அளிக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் நியாயத்தின் பக்கம் இருப்போம் என்று சொல்லி உயர் அதிகாரிகளும், தமிழக அரசும் தனக்கு ஆதரவு  அளித்தது. ஆபாசமான பதிவுகளை யார் செய்தது என்ற விபரம் கேட்டு, சமூக வலைதள அலுவலகங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. மூன்று மாதமாகியும் இன்னும் அந்த விபரங்கள் கிடைக்கவில்லை. அதேபோல, என் குடும்பத்தாரை ஆபாசமாக சித்தரித்து வெளியிடப்பட்ட படங்கள் சமூக வலைதளங்களில் இன்றைக்கும் உள்ளன. நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உலகம் முழுதும் உள்ளனர். பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் அவ்வியக்கத்தைச் சேர்ந்தோரையும், இதுபோன்ற இயக்கங்களையும் சைபர் கிரைம் புலனாய்வின் உயரிய அமைப்பான ஐபோர்சி தீவிரமாக கண்காணிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

திருச்சி எஸ்.பி.யின் இந்த பேச்சு அரசியல் களத்தில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. 

சார்ந்த செய்திகள்