Skip to main content

அலை கடலில் அரோகரா கோஷம்; மக்கள் வெள்ளத்தில் மகா சூரனை வதம் செய்தார் ஜெயந்திநாதர்

Published on 31/10/2022 | Edited on 31/10/2022

 

அறுபடை நாயகன் செந்தில் வேலவன் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரின் கடலோரம் ஆலயமாய் வீற்றிருந்து அருளாட்சி செய்கிறார்.

 

சுப்பிரமணிய சுவாமி கோயிலின் கந்த சஷ்டி விழா தீபாவளி மறுநாள் 25ம் தேதி தொடங்கியது. தமிழகம் எங்கிலும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் சஷ்டி விரதம் மேற்கொண்டனர். கந்த சஷ்டி விழாவின் முக்கிய அம்ச நிகழ்வான நேற்று, அதிகாலை ஆலய நடை திறக்கப்பட்டு 1.30 மணியளவில் விஸ்வரூப தரிசனம், 2 மணியளவில் உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. காலை 6 மணியளவில் யாகசாலை பூஜை துவங்கியது. நண்பகல் பெரிய தீபாராதனைக்குப் பின் மதியம் ஒரு மணியளவில் சப்பரத்தில் அலங்காரங்களுடன் அறுபடை நாயகன் ஜெயந்திநாதர் யாகசாலையிலிருந்து எழுந்தருளியவர் சண்முக விலாசம் வந்தடைந்தார்.

 

சிறப்பு தீபாராதனைக்குப் பின்பு ஜெயந்திநாதராக அவதரித்த முருகப் பெருமானுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகத்துடன் கூடிய அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் பல்வேறு மாய உருவங்களுடன் அவதாரமெடுத்து வருகிற சூரபத்மனை வதம் செய்வதற்காக மாலை 4 மணியளவில் வெள்ளிச் சப்பரத்தில் கடற்கரையோரம் பக்த கோடிகள் புடை சூழ எழுந்தருளினார் ஜெயந்திநாதர்.

 

நிகழ்ச்சியைக் காணத் திரண்ட லட்சக்கணகான பக்தர்களின் வெள்ளம் ஜல சமுத்திரத்தையே மூடியிருந்தது. பக்தர்களின் சரண அரோகரா பக்தி கோஷங்கள் தரையதிரக் கிளம்ப மாலை 4.50 மணிக்கு சிங்க மகா சூரனை வதம் செய்த ஜெயந்திநாதர், தனது சுய வடிவில் உருவெடுத்த சூரபத்மனை தனது அன்னை ஸ்ரீபார்வதி தேவியார் அருளிய சக்திவேலால் சம்ஹாரம் செய்தார். சேவல் வடிவமாக உருவெடுத்த சூரனையும் வதம் செய்த ஜெயந்திநாதர், சூரனை சேவல் கொடியாகவும் மயிலாகவும் ஏற்றுக்கொண்டார். கொரோனா தடை காலத்திற்குப் பின் கடற்கரையில் நடந்த வரலாற்றுச் சிறப்பு நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட காவல் எஸ்.பி.பாலாஜி சரவணன் மற்றும் ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.

 

காவல்துறை சார்பில் 5 காவல் கூடுதல் கண்காணிப்பாளர்கள், 103 காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட 3000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மாவட்ட எல்லைகளில் 13 இடங்களில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர். 200 கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் 3 ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் வசதிக்காக 18 இடங்களில் தற்காலிக கொட்டகைகள், 66 இடங்களில் குடிநீர் வசதியும், 320 இடங்களில் கழிப்பிட வசதியும் செய்யப்பட்டுள்ளது. 42 இடங்களில் மருத்துவ முகாம்கள், 3 தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் 5000 வாகனகங்கள் நிறுத்துமளவுக்கு இட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்செந்தூரில் கொட்டித்தீர்த்த மழை

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
 Heavy rain in Tiruchendur

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன்தினம் (16-12-23) இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வரலாறு காணாத அதி கன மழைப்பொழிவை ஏற்படுத்திய வளிமண்டல சுழற்சி தற்பொழுது விலகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் படிப்படியாக மழை குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தின் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி காயல்பட்டினத்தில் 21 சென்டிமீட்டர் மழை இன்று பதிவாகியுள்ளது. நேற்று 95 சென்டி மீட்டர் மழை காயல்பட்டினத்தில் பதிவாகிய நிலையில் இன்று 21 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடியில் அதிகபட்சமாக திருச்செந்தூரில் 23.1 சென்டி மீட்டர் மழையும், குலசேகரப்பட்டினம் 18.4 சென்டி மீட்டர், ஸ்ரீவைகுண்டம் 17.4 சென்டி மீட்டர், சாத்தான்குளம் 15.6  சென்டி மீட்டர் தூத்துக்குடி 13.7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Next Story

தொடர் கனமழை; 1000க்கும் மேற்பட்ட ரயில் பயணிகள் அவதி

Published on 18/12/2023 | Edited on 18/12/2023
Continuous heavy rain; More than 1000 train passengers suffered

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன்தினம் (16-12-23) இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டும், மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டும் வருகின்றன. மேலும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்ட மக்களுக்கான அவசர உதவிகளுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, தென் மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாகத் தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும், மீட்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து நேற்று சென்னை எழும்பூருக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுள்ளது. அதே சமயம் தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால், தண்டவாளம் சேதம் காரணமாக செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு முதல் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ரயிலில் இருக்கும் 1000க்கும் மேற்பட்ட பயணிகள் உணவு, குடிநீர் இன்றி அவதியடைந்துள்ளனர். அரசு அதிகாரிகள் தங்களை உடனடியாக மீட்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் ரயிலில் உள்ள பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக ரயில்வே தரப்பில் இருந்தும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.