Skip to main content

'உருமாறிய கரோனா' பரவல்; மீண்டும் அமலுக்கு வரும் இ-பாஸ்!

Published on 31/12/2020 | Edited on 31/12/2020

 

corona

 

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தற்பொழுது 'உருமாறிய கரோனா' தொற்று பரவிவரும் சூழலில் கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளையும், சில தளர்வுகளையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

 

அதன்படி, தமிழகத்தில் ஜனவரி 31-ஆம் தேதிவரை ஏற்கனவே நடைமுறையிலுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 'உருமாறிய கரோனா' வைரஸின் தாக்கத்தைக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தளர்வுகளின்றி ஊரடங்கு அமலில் இருக்கும். ஜனவரி 16-ஆம் தேதி காணும் பொங்கலுக்கு சென்னை மெரினா உட்பட எந்தக் கடற்கரையிலும் மக்களுக்கு அனுமதியில்லை. வழிபாட்டுத் தலங்களில் நேர நடைமுறைகளைப் பின்பற்றி மக்கள் தரிசனம் செய்யலாம். 

 

ஜனவரி 1 -ஆம் தேதி முதல் 200 பேர் வரை பங்கேற்கும் சமுதாய, அரசியல் பொதுக்குழு கூட்டம், விளையாட்டு, கலாச்சாரம், கல்வி, மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இந்தக் கூட்டங்களை நடத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை காவல் ஆணையரிடம் முன் அனுமதி பெறவேண்டும். திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள், உள் அரங்கு மற்றும் வெளியரங்குகளில் நடக்கும் படப்பிடிப்புகளில் உச்சவரம்பின்றி பணியாற்ற அனுமதி அளிக்கப்படுகிறது. 'உருமாறிய கரோனா' காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ-பதிவு (இ-பாஸ்) அவசியம். புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தமிழகம் வர இ-பதிவு தேவையில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

 

மேலும், இந்தத் தளர்வுகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என அரசு அலுவலர்கள் உறுதி செய்யவேண்டும். நோய்த் தொற்று குறைந்தாலும் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாடு முழுவதும் பஞ்சுமிட்டாய் விற்கத் தடை

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
Ban on sale of cotton candy across Tamil Nadu

புதுச்சேரியின் கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா தலங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாயில், புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுவதை உணவுப் பாதுகாப்புத் துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்திருந்தனர். இச்சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்கத் தடை விதிக்கப்பட்டது. அரசிடம் இருந்து முறையான ஒப்புதலோடு விற்பனைக்கான உரிமம் பெற்ற பிறகுதான் மீண்டும் பஞ்சு மிட்டாயை விற்பனை செய்ய வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ரவிச்சந்திரன் பிறப்பித்திருந்தார்.

அதே சமயம் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறையின் சார்பில் சென்னை மாவட்ட அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறையினர் சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களை பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பஞ்சுமிட்டாய் தயாரிக்கும் இடங்களில் சோதனை நடத்தி தரமில்லாத மற்றும் ரசாயனம் கலக்கப்பட்ட பஞ்சுமிட்டாய் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்திருந்தனர்.

மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் 'ரோடமைன் பி' என்ற புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனம் கலப்படம் செய்யப்பட்டிருந்தது உறுதியாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் பிங்க், பச்சை, ஊதா உள்ளிட்ட நிறங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாய்களை சாப்பிட வேண்டாம் என உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் ‘ரோடமைன் பி’ உள்ளிட்ட ரசாயனங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறைக்கு உணவுப் பாதுகாப்புத்துறை பரிந்துரை செய்திருந்தது. 

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பஞ்சுமிட்டாயில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனம் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பேச்சுவார்த்தையின் நிலவரம் என்ன? - அமைச்சர் சிவசங்கர் பேட்டி

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
'The decision will be taken after discussion tomorrow'- Minister Sivashankar interview

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாகக் கடந்த டிசம்பர் மாதம் நோட்டீஸ் வழங்கி இருந்தனர். மேலும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் அரசு சார்பில் இன்னும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தவில்லை. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இருந்தனர்.

இதற்கான பேச்சுவார்த்தை கடந்த டிசம்பர் 27 ஆம் தேதியும், ஜனவரி 3 ஆம் தேதியும் நடைபெற்றது. இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை. மேலும் தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் போராட்ட அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன்படி ஜனவரி 9 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகப் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.

இந்நிலையில், சென்னை பல்லவன் இல்லத்தில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் தொழிற்சங்க பிரதிநிதிகள் உடனான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிவசங்கர், ''பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்க இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அவர்கள் அவர்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி இருக்கிறார்கள். 15வது ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க வேண்டும், பணிபுரிகின்ற பணியாளர்களுடைய அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுடைய அகவிலைப் படியை உயர்த்தி தருவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருக்கிறார்கள். இதில் நிதி கூடுதலாக செலவாகின்ற சில விஷயங்களை நிதித் துறையோடு கலந்தாலோசித்து, இதுகுறித்து விவாதித்து முடிவு எடுத்த பிறகு தான் அறிவிக்கப்படும் என்ற காரணத்தினால், நாளை ஒருநாள் நேரம் கேட்டிருக்கிறோம். நாளை மறுநாள் மறுபடியும் பேசிய பிறகு விவாதிக்கலாம் என்று சொல்லி இருக்கிறோம். எனவே அவர்களுடைய போராட்ட அறிவிப்பை கைவிடக் கோரி நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. நாளை மறுநாள் பேசி முடிவு எட்டப்படும்'' என்றார்.