Train strike in support of farmers ..!

Advertisment

மத்திய பா.ஜ.கஅரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லியில் லட்சக் கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் அரசியல் கட்சியினர், தொழிற்சங்கத்தினர், பல்வேறு அமைப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில், 9ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அந்த அமைப்பு அறிவித்திருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோட்டில்,டவுன் டி.எஸ்.பிராஜு தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ரயில் நிலைய நுழைவாயிலில் தடுப்புகள் அமைத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தி.வி.கமாநிலப் பொருளாளர்,ரத்னசாமி தலைமையில் அமைப்பின் நிர்வாகிகள் காளைமாடு சிலை அருகே ஒன்று திரண்டு பேரணியாக ரயில் நிலையத்தை நோக்கிச் சென்றனர். அவர்கள் மத்திய பா.ஜ.கஅரசின் நடவடிக்கையைக் கண்டித்தும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பினார்கள். பின்னர், ரயில் நிலையத்திற்கு முன்பு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து வாகனங்களில் ஏற்றி, அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். இதனால், ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது. முன்னதாக, பேரணியை ஈரோடு ம.தி.மு.க எம்.பிகணேசமூர்த்தி தொடங்கி வைத்தார். விவசாயிகளுக்கான போராட்டக் குரல் தொடர்ந்து ஓங்கி ஒலித்து வருகிறது.