Train service has started on Kavaraipettai route

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பிகார் மாநிலம் தர்பங்காவிற்கு ‘பாக்மதி எஸ்பிரஸ்’ என்ற பயணிகள் ரயில் (ரயில் எண் : 12578) இயக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் வழக்கம் போல் பெரம்பூரில் இருந்து நேற்று (11.10.2024) இரவு 07.44 மணியளவில் புறப்பட்ட இந்த ரயில், 08.27 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்புறத்தில் இந்த ரயில் வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பயணிகள் ரயிலின் முதல் 7 பெட்டிகள் தடம் புரண்டது. அதோடு ரயிலின் ஒரு பெட்டியில் தீ விபத்தும் ஏற்பட்டது. சரக்கு இரயிலின் 3 பெட்டிகள் சேதமடைந்தது. பயணிகள் ரயிலில் பயணம் செய்த 19 பேர் காயமடைந்தனர்.

Advertisment

இதனையடுத்து காயமடைந்த 19 நபர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களில் 3 பயணிகள் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதோடு காயமடைந்த 4 பயணிகள் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நல்வாய்ப்பாக இவ்விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. மேலும், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் உத்தரவின் பேரில் உயர்மட்ட குழு ஒன்று இந்த விபத்து தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ளது. மறுபுறம் என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

Train service has started on Kavaraipettai route

இதற்கிடையே இந்த ரயில் விபத்து நடந்த இடத்தில், தண்டவாளத்தில் தடம்புரண்ட ரயில் பெட்டிகளில் 9 ரயில் பெட்டிகள் ஏற்கனவே அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் எஞ்சி இருந்த 2 பெட்டிகளும் கிரேன் உதவியுடன் அகற்றப்பட்டன. இந்நிலையில் ரயில் விபத்து நடந்த இடத்தில் சென்னை மார்க்கத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. அதாவது டெல்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை செண்ட்ரல் செல்லும் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் : 12434) மெயின் லைனில் இரவு 09.05 மணியளவில் இயக்கப்பட்டது. முன்னதாக இன்று (12.10.2024) இரவுக்குள் 2 ரயில் பாதைகளும், நாளை (13.10.2024) காலைக்குள் மற்ற 2 பாதைகளும் சீர் செய்யப்பட்டு ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.