Skip to main content

போக்குவரத்து அலுவலர்கள் தீவிர வாகன தணிக்கை; ரூ.12 லட்சம் அபராதம் வசூல்!

Published on 16/09/2018 | Edited on 16/09/2018
police

 

தமிழகம் முழுவதும், போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கடந்த நான்கு நாள்களாக முக்கிய சுங்கச்சாவடிகளில் தீவிர வாகன  தணிக்கையில் ஈடுபட்டுள்¢ளனர்.


தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில், போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தீவிர வாகனத் தணிக்கை நடத்த  உத்தரவிடப்பட்டு உள்ளனர். தொடர் விடுமுறை என்பதால், சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கில் தீவிர வாகனத்  தணிக்கைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன.


அதன்படி செப். 12ம் தேதி மாலை 6 மணி முதல் நாளை (17ம் தேதி) காலை 6 மணி வரை 24 மணி நேர வாகனத் தணி க்கை நடந்து வருகிறது. இதையடுத்து, சேலம் சரக துணை போக்குவரத்து ஆணையர் சத்தியநாராயணன் மேற்பார்வையில்  வட்டார போக்குவரத்து அலுவலர்கள், வாகன ஆய்வாளர்கள் சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டி, தொப்பூர் ஆகிய சுங்கச்ச £வடிகளில் 24 மணி நேரம் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

police


இதற்கென வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது. சிறப்பு வாகனத்  தணிக்கையில் இதுவரை 2262 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு உள்ளன. அவற்றில், 644 வாகனங்களுக்கு சோதனை  அறிக்கை வழங்கப்பட்டு உள்ளது.


குறிப்பாக சேலம், தர்மபுரி மாவட்டங்கள் வழியாக இயக்கப்படும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் சோதனை செய்யப்பட்டன.  அவற்றில் 482 ஆம்னி பேருந்துகள் பயணிகள் சாராத சரக்குகளை ஏற்றிச்சென்றது தெரிய வந்தது. மேலும், கண்கூசும்  முகப்பு விளக்குகளை பயன்படுத்தியது, அவசர வழி கதவு செயல்படாதது, காற்று ஒலிப்பான் பயன்படுத்தியது, சாலைவரி  செலுத்தாமல் இயக்கியது, முறையான ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட குறைபாடுகளுக்கு சோதனை அறிக்கை  வழங்கப்பட்டது.


மேலும் அதிக பாரம் ஏற்றியது, வரி செலுத்தாமல் இயக்கியது மற்றும் பல்வேறு குறைபாடுகளுடன் இயக்கப்பட்ட 162 சரக்கு  மற்றும் இதர வாகனங்களுக்கும் சோதனை அறிக்கை அளிக்கப்பட்டது.


இந்த சிறப்பு வாகனத் தணிக்கையின் மூலம் 644 சோதனை அறிக்கை வழங்கப்பட்டு உள்ளதோடு, ரூ.12 லட்சத்து 41600  அபராதமும் (இணக்கக் கட்டணம்) வசூலிக்கப்பட்டது. சாலை வரியாக ரூ.89775 வசூலிக்கப்பட்டது. மேலும், ரூ.3 லட்சத்து  26200 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட புதுச்சேரி ஆம்னி பேருந்து ஒன்று சிறைபிடிக்கப்பட்டது.

சார்ந்த செய்திகள்