தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இத்தகைய சூழலில் தான் ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளைப் பார்வையிட மத்திய அரசின் குழு நேற்று (06.12.2024) மாலை தமிழகம் வருகை தந்தனர். அதாவது மத்திய உள்துறை இணைச்செயலர் ராஜேஷ் குப்தா தலைமையிலான குழுவினர் சென்னை வந்தனர். இந்த குழுவில் மத்திய உள்துறை, பேரிடர் குழு, வேளாண்துறை, வருவாய்த்துறைகளைச் சேர்ந்த 7 பேர் இடம் பெற்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து இந்த குழுவினர் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மத்திய குழுவினர் இன்று (07.12.2024) ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மழையால் நெல் மூட்டைகள் சேதமடைந்தது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி, வருவாய்த்துறை தலைமை செயலாளர் அமுதா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மத்தியக் குழுவினருக்கு விளக்கமளித்தனர். இதற்கிடையே கடந்த 3ஆம் தேதி (03.12.2024) புதுச்சேரி - கடலூர் இடையே அமைந்துள்ள இடையார் பாலம் கனமழையால் சேதம் அடைந்தது. இதனால் கடந்த 3 நாட்களாகப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதே சமயம் பாலம் சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் பாலம் சீரமைக்கப்பட்டு 3 நாட்களுக்குப் பிறகு இன்று (07.12.2024) போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.