
தமிழகத்தில் புதிதாக இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதுவரை 31,667 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் கரோனாலிருந்து 604 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
தமிழகத்தில் 14,397 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் ஒரேநாளில் 1,156 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் ஐந்தாம் நாளாக ஒரே நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்து தொடர்கிறது. இதனால் சென்னையில் இதுவரை 22,149 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1500-க்கும் மேற்பட்டோர் கரோனா பாதிப்பு இருப்பது இதுவே முதல்முறை. தமிழகத்தில் தொடர்ந்து எட்டாவது நாளாக கரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் தமிழகத்தில் 1,497 பேரும், மற்றவர்கள் பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளில் இருந்து வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் கரோனாவால் இதுவரை 212 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் 16,999 பேர் குணமடைந்துள்ளனர். இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 18 பேர் உயிர் இழந்ததால் கரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 269 ஆக அதிகரித்துள்ளது. இன்று தனியார் மருத்துவமனையில் 5 பேர், அரசு மருத்துவமனைகளில் 13 பேர் என மொத்தம் 18 பேர் உயிரிழந்துள்ளனர். வேலூர் மருத்துவமனையில் 20 வயது பெண் ஒருவர் கரோனாவால் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் எட்டாவது முறையாகத் தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து வருகிறது. செங்கல்பட்டில் ஒரே நாளில் 135 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.