தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் ரூ.4 ஆயிரத்து 366 கோடி பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை, ரூ.651 கோடியில் கரும்பு விவசாயிகளுக்குச் சிறப்பு ஊக்கத் தொகை, ரூ.614 கோடியில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், ரூ.270 கோடி ரூபாயில் விவசாய இயந்திரங்கள், ரூ.56 கோடியில் முதல் முறையாக ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியம் மற்றும் ரூ.137 கோடியில் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம், ரூ.139 கோடியில் பயறு பெருக்கத் திட்டம் ஆகியவற்றால் இந்தியாவிலேயே தமிழ்நாடு வேளாண்மைத் துறையில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “விவசாயத்தைப் பெருக்கிட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிய கலைஞர் விவசாயிகளுக்கான ரூ.7 ஆயிரம் கோடி கூட்டுறவுக் கடன்களை ரத்து செய்தார். விவசாய பம்ப் செட்களுக்கு இலவச மின்சாரம் முதலிய பல்வேறு சலுகைகளை வழங்கினார். அதே போன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகள்பால் மிகுந்த அன்பு கொண்டு விவசாயத்துறை, வேளாண்மைத்துறை என அழைக்கப்பட்ட துறையின் பெயரை வேளாண்மை - உழவர் நலத்துறை எனத் தாம் ஆட்சிப் பொறுப்பேற்ற 2021 ஆம் ஆண்டிலே அறிவித்து உழவர்களுக்காகப் பல சிறப்புத் திட்டங்களை நிறைவேற்றி வருகின்றார். இத்திட்டங்களால் வேளாண் உற்பத்தி பெருகியுள்ளது. உழவர்கள் வளம் பெறுகின்றனர். தமிழ்நாடு உணவு உற்பத்தியில் முன்னேறியுள்ளது.
வேளாண்மைத் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை, 24.50 இலட்சம் விவசாயிகளுக்கு ரூ.4 ஆயிரத்து 366 கோடி பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை, பயிர்ச் சேதங்களுக்கு நிவாரணம், கரும்பு விவசாயிகள் பயனடையும் வகையில் திட்டங்கள், ரூ.270 கோடி ரூபாயில் விவசாய இயந்திரங்கள், முதல் முறையாக ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு 100 சதவிகிதம் மானியம், உழவர் சந்தைகள், உணவு தானிய உற்பத்தி அதிகரிப்பு போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மேலும் குறுவை நெல் சாகுபடியில் 48 ஆண்டுகளில் இல்லாத சாதனை, விவசாயிகளுக்குத் தார்ப்பாய்கள், ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்டம், சிறுதானிய இயக்கம், பயறு பெருக்கத் திட்டம், எண்ணெய்வித்துகள் உற்பத்திக்கு ஊக்கம், தென்னை சாகுபடி, வேளாண் கருவிகள் வழங்குதல், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதே சமயம் திமுக ஆட்சி தொடங்கிய 2021 முதல் வேளாண் துறையில் அடைந்துவரும் முன்னேற்றங்களுக்காகப் பல்வேறு விருதுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் 2022 ஆம் ஆண்டில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்துடன் ஒரே இடத்தில் நான்கு மணி நேரத்தில் 6 இலட்சத்து 3 ஆயிரம் மரக்கன்றுகளை வெற்றிகரமாக நட்டு முடித்தமைக்காக எலைட் உலக சாதனை புத்தகத்தில் தமிழ்நாடு இடம் பெற்றுப் பாராட்டப்பட்டது.
கடந்த 2023 ஆம் ஆண்டில் மக்காச்சோளம் உற்பத்தி வீழ்ச்சியைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட சிறந்த ஆராய்ச்சித் திட்டங்களுக்காகத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அங்கீகரிக்கப்பட்டு வழங்கப்பட்ட ஸ்கோச் (SKOCH) ஆர்டர் ஆப் மெரிட் விருது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம் அத்தியந்தலில் இயங்கும் சிறுதானிய மகத்துவ மையம் 2023 ஆம் ஆண்டிற்கான இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் வழங்கும் சிறந்த சிறுதானிய மையத்திற்கான விருது. உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்று தமிழ்நாடு வேளாண்மைத்துறைக்குப் புகழ் சேர்த்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சீர்மிகு திட்டங்களால் வேளாண்மைத் துறை உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, அண்டை மாநிலங்களுக்கும் உணவுப் பொருள்களை வழங்கி தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.