Skip to main content

“நா யாரு... என் பேக்ரவுண்ட் என்னன்னு தெரியுமா?” - ஆளுநரின் ஆலோசகர் அடாவடி

 

tn Governor rn ravi advisor involved in an argument with an Ola driver

 

குடி போதையில் ஓலா கார் டிரைவரை தாக்கியதாகக் கூறி தமிழக ஆளுநரின் ஊடக ஆலோசகர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் தனிப்பட்ட ஊடக ஆலோசகராக இருப்பவர் திருஞானசம்பந்தம். இவர் கடந்த 6 ஆம் தேதி இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து முகலிவாக்கம் வரை செல்ல ஓலா காரை புக் செய்துள்ளார். அப்போது விமான நிலையத்துக்கு வந்த காரில் ஏறி அமர்ந்த திருஞானசம்பந்தம், வரும் வழியில் இருந்த ஏடிஎம்-ல் நிறுத்தச் சொல்லியுள்ளார். அதன்பேரில் ஓட்டுநரும் காரை நிறுத்தியுள்ளார். பின்னர், வழியில் ஆங்காங்கே திடீர் திடீரென காரை நிறுத்துமாறு கேட்டுள்ளார். இதனால் அதிருப்தியடைந்த ஓட்டுநர், குறிப்பிட்ட நேரத்தில் இன்னொரு சவாரிக்கு செல்லவேண்டும்.. அதனால் எல்லா இடத்திலும் காரை நிறுத்த முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

 

இதனால் ஆத்திரமடைந்த திருஞானசம்பந்தம் ஓட்டுநரை தகாத வார்த்தையில் திட்டியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஒருகட்டத்தில்  நந்தம்பாக்கம் ஹோட்டல் மவுண்ட் அருகே காரை நிறுத்திய ஓட்டுநர்., திருஞானசம்பந்தத்தை காரை விட்டு இறங்குமாறு கூறியுள்ளார். குடி போதையில் இருந்ததாகக் கூறப்படும் திருஞானசம்பந்தம், “நான் யாருன்னு தெரியுமா?” எனக் கூறி, மேலும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அப்பகுதியே பரபரப்புடன் காணப்பட்டது.

 

அப்போது, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்... இருவரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில், காரில் வந்தது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் தனிப்பட்ட ஊடக ஆலோசகரான திருஞானசம்பந்தம் என்பது தெரியவந்தது. இதனால் அதிருப்தியடைந்த போலீசார் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து, திண்டிவனத்தை சேர்ந்த சம்பந்தப்பட்ட ஓலா டிரைவர், ஆளுநரின் ஊடக ஆலோசகர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “குடும்ப சூழ்நிலை காரணமாக நான் ஓலா கால் டாக்சியில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறேன். இந்த நிலையில் நேற்று இரவு சென்னை விமான நிலையம் முதல் போரூர் வரை செல்ல தனது வாகனத்தை திருஞானசம்பந்தம் என்பவர் முன்பதிவு செய்தார்.

 

பயணி ஏறியவுடன் இறங்கும் இடம் வரை நேரடியாக அழைத்து சென்று விடும் டிரிப்பைத்தான் அவர் தேர்வு செய்திருந்தார். பிறகு, காரில் பயணித்தபோது திருஞானசம்பந்தம் கிண்டி கத்திபாரா வந்தபோது ஏ.டி.எம் பக்கத்தில் 10 நிமிடம் காரை நிறுத்த சொன்னார். ஆனால், கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டார். கார் பயணிக்கத் தொடங்கியபோது மீண்டும் ஒரு இடத்தில் காரை நிறுத்தச் சொன்னார். எனது வேலைப் பளு காரணமாக அவர் அப்படி கூறியபோது வேறு வாகனத்தை பதிவு செய்து கொள்ளுங்கள் எனக் கூறினேன்.

 

அப்போது காரில் வந்த பயணி திருஞானசம்பந்தம், ‘உனக்கு அவ்வளவு திமிரா.. என் பேக்ரவுண்ட் என்னன்னு தெரியுமா? நான் யார்னு தெரியுமா?’ என்று மிரட்டினார். அப்போது எனது கன்னத்திலும் ஓங்கி அறைந்தார். அதை செல்போனில் பதிவு செய்தபோது செல்போனையும் தட்டிவிட்டார்.” எனக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !