சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று (23/02/2021) காலை 11.00 மணிக்கு சட்டப்பேரவையின் கூட்டம் கூடியது. அதைத் தொடர்ந்து, 2021 - 2022 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து பட்ஜெட் உரையை வாசித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், "தமிழகத்தின் கடன் ரூபாய் 5.70 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2021 - 2022 ஆம் நிதியாண்டிற்கு இடைக்கால வரவு - செலவு திட்ட மதிப்பீட்டில் ரூபாய் 1,738.81 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்டத்தை அமைக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூபாய் 6,683 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடிக்காக இடைக்கால வரவு - செலவு திட்ட மதிப்பீட்டில் ரூபாய் 5,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் 12,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.
12,000 பேருந்துகளில் 2,000 பேருந்துகள் மின்சாரப் பேருந்துகளாக இருக்கும். முதல் கட்டத்தில் 2,200 பிஎஸ் 6 பேருந்துகள், 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். 2021 - 2022 ஆம் ஆண்டிற்கான வருவாய் பற்றாக்குறை ரூபாய் 41,417.30 கோடியாக இருக்கும். ஒப்புதல் தரப்பட்ட அனைத்துப் பணிகளையும் நிறைவேற்ற 2021 - 2022 ஆம் ஆண்டில் தேவையான நிதி ஒதுக்கப்படும். மூலதனச் செலவினம் 14.41% ஆக உயர்ந்து ரூபாய் 43,170.61 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சுகாதாரத்துறைக்கு ரூபாய் 19,420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மின்சாரத்துறைக்கு ரூபாய் 7,217 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் அதிகரித்துள்ள நிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்க இயலாது. பொருளாதாரத்தில் எந்தவொரு பாதகமான தாக்கமும் ஏற்படாமலிருக்க பற்றாக்குறையைக் குறைக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.