Skip to main content

எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க நேரம் ஒதுக்க வேண்டும்..! - மாவட்ட சிறப்பு நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தல்!

Published on 12/01/2021 | Edited on 12/01/2021

 

Time should be allotted to investigate cases against MPs and MLAs ..! - Instruction to the District Special Courts!

 

மாவட்ட சிறப்பு நீதிமன்றங்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான குற்ற வழக்குகளின் விசாரணைக்கென குறிப்பிட்ட நேரம் ஒதுக்க வேண்டுமென, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

 

எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில், அவற்றைக் கண்காணிப்பது தொடர்பாக, தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென, அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 

இந்த உத்தரவின் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்குப் பதிந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், நிலுவையில் உள்ள முன்னாள் மற்றும் இந்நாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான அவதூறு வழக்குகள் விசாரணையைத் துரிதப்படுத்தவும், கீழமை நீதிமன்றங்களில் அவர்கள் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

 

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது உயர்நீதிமன்றப் பதிவாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த உத்தரவின்படி நிலுவையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மீதான அவதூறு வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தனி நீதிபதி சதீஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக எடுத்துரைத்து,  வழக்கின் முன்னேற்றங்களைத் தாக்கல் செய்தார்.

 

தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தமிழகத்தின் 32 மாவட்டங்களில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றங்களையே சிறப்பு நீதிமன்றங்களாகச் செயல்பட அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளபோதும், ஏற்கனவே சம்பந்தப்பட்ட செஷன்ஸ் நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்கை விசாரிப்பதில் முன்னேற்றம் இல்லை எனவும், சென்னையில் உள்ள மூன்று சிறப்பு நீதிமன்றங்களில், ஒரு நீதிமன்றத்திற்கு இதுவரை நீதிபதி பணியிடம் காலியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், எம்.எல்.ஏ க்கள், எம்.பி.க்கள் மீதான வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தும் வகையில், மாவட்ட நீதிமன்றங்கள் இதற்கென குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, இவ்வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டதோடு, சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறும் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பானை சின்னம் வேண்டும்' - நீதிமன்றத்தை நாடிய வி.சி.க.

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 'We want a pot symbol'-vck moves the court

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதோடு, பம்பரம் சின்னம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற முடிவில் மதிமுக தரப்பு உள்ளது.

இந்நிலையில், அதே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதியில் விசிக போட்டியிடும் நிலையில் பானை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது விசிக.

Next Story

தமிழ்நாட்டில் இடைத்தேர்தல்? - இன்று வெளியாகும் அறிவிப்பு

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
By-elections to inform?-Notices released today

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.

தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர் சாந்து  ஆகியோர் நேற்று முன்தினம் பதவி ஏற்று கொண்டனர். அதேநேரம் நாடு முழுவதும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது. தயார் நிலையில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் உள்ளன. தொடர்ந்து தேர்தல் தேதியை முடிவெடுப்பதற்கான தேர்தல் ஆணையர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இன்று  பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கான செய்தியாளர் சந்திப்பு இன்று டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதியோடு சில மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஒடிசா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும், தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 

தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக வெளி மாநிலங்களில் இருந்து ராணுவப் படையினர் தமிழகம் வந்துள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.