Skip to main content

இடி மின்னல் தாக்கி இருவர் பலி; மூவர் படுகாயம்...

Published on 10/09/2020 | Edited on 10/09/2020

 

Three injured in thunder

 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது திண்டிவனம் அருகே முனுசாமி என்பவர் செம்மறி ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.இடி மின்னலுடன் மழை பெய்தது கண்டு ஆடுகளை ஓட்டிக்கொண்டு வீடு திரும்பும் நேரத்தில் மின்னல் தாக்கியதில் முனுசாமி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மேலும் இவருடன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த நடுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஜானகி அதே பகுதியைச் சேர்ந்த விசுவநாதன், அவ்வையார் குப்பத்தைச் சேர்ந்த ராமு ஆகிய மூவரும் மின்னல் தாக்கியதில் முகம், கை, கால்களில் தீக்காயம் ஏற்பட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 


அதேபோன்று கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியிலும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது. ஊட்டி அருகே உள்ள நத்தம் கிராமத்தைச் சேர்ந்த பாலிடெக்னிக் படிக்கும் 27 வயது கண்ணன் அப்பகுதியில் மாடுகளை ஓட்டிக் கொண்டு வீட்டிற்குச் சென்று கொண்டடிருந்தார். அப்போது திடீரென இடி மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது. அந்த நேரத்தில் வயல்வெளிகளுக்கு வேலைக்குச் சென்றவர்கள், ஆடு மாடு மேய்க்கச் சென்றவர்கள் இடி மின்னல் தாக்கி இறக்கும் துயரம் தொடர்ந்து நடந்துவருகின்றது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறுதி ஊர்வலத்தில் விழுந்த இடி; உடலை தூக்கி சென்றவர் உயிரிழப்பு

Published on 03/11/2023 | Edited on 03/11/2023

 

 The thunder fell on the funeral procession; The person who carried the body is a casualty

 

மதுரையில் இறுதி ஊர்வலத்தின் போது மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

மதுரை மாவட்டம் கீரனூரில் இறுதிச் சடங்கு ஊர்வலம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் இறந்தவர் உடலைத் தூக்கிச் சென்று இளையராஜா (35) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மின்னல் தாக்கியதில் பலத்த காயமடைந்த அனைவரும் மதுரை மற்றும் திருப்புவனம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறுதி ஊர்வலத்தில் இடி விழுந்து ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் படுகாயமடைந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

Next Story

மின்னல் தாக்கி இளம்பெண் உயிரிழப்பு

Published on 29/06/2023 | Edited on 29/06/2023

 

thunder in keeramangalam incident

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் இன்று வியாழக்கிழமை மாலை கடும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் பல கிராமங்களில் மின்தடை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் கீரமங்கலத்தில் இடி தாக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் சிதம்பர விடுதி ஒத்தாங்கொல்லை பகுதியைச் சேர்ந்த சிங்கப்பூரில் வேலை செய்து வரும் கோபுவுக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி வித்யா (31) என்ற மனைவியும் பவ்யாஸ்ரீ (2) என்ற மகளும் உள்ளனர். கோபு சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் சிங்கப்பூர் சென்றுவிட்டார்.

 

வியாழக்கிழமை மாலை வீட்டு வாசலில் நின்ற மரங்களிலிருந்து கொட்டிக்கிடந்த காய்ந்த இலைகளை கூட்டிக் கொண்டிருக்கும் போது அருகில் நின்ற புளியமரத்தில் இடி, மின்னல் தாக்கி அருகில் நின்ற வித்யா மீதும் தாக்கியது. இதில் உடல் கருகி வித்யா சுருண்டு விழுவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மீட்டு கொத்தமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அதற்குள் வித்யா உயிரிழந்துள்ளது தெரிய வந்தது.

 

தகவலறிந்து வந்த வருவாய்த் துறையினரும், கீரமங்கலம் போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் வித்யாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனது இளம் மனைவி வித்யா மின்னல் தாக்கி உயிரிழந்த தகவல் அறிந்து கோபுவும் சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளார். மழை தொடங்கும் முன்பே இடி மின்னல் தாக்கி 2 வயது குழந்தையின் தாயான இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.