Skip to main content

மின்வேலியில் சிக்கி பலியான காட்டு மாடு; வனத்துறைக்கு தெரியாமல் புதைத்த 3 விவசாயிகள் கைது!

Published on 30/03/2023 | Edited on 30/03/2023

 

Three farmers arrested by police in forest cow case

 

அரூர் அருகே, மின் வேலியில் சிக்கி பலியான காட்டு மாட்டை வனத்துறைக்குத் தெரிவிக்காமல் புதைத்த 3 விவசாயிகளை வனத்துறையினர் கைது செய்தனர்.

 

தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள சூலக்குறிச்சி கிராமம், பூமரத்துக் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமச்சந்திரன் என்கிற சுந்தரம், சக்திவேல், சின்னராமன். விவசாயிகளான இவர்கள், தங்களின் விளை நிலத்தில் காட்டுப் பன்றிகள் நுழைவதை தடுப்பதற்காக பொது மின் கம்பத்தில் இருந்து திருட்டுத்தனமாக மின் இணைப்பை எடுத்து, வயல்வெளியைச் சுற்றிலும் சட்ட விரோதமாக மின் கம்பி வேலி அமைத்து இருந்தனர். 

 

இந்நிலையில், கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு, உணவு தேடி வந்த காட்டு மாடு ஒன்று மின் வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளது. மறுநாள் தோட்டத்துக்குச் சென்றவர்கள், யாருக்கும் தெரியாமல் விளை நிலத்திலேயே குழி தோண்டி காட்டு மாட்டை புதைத்து விட்டனர். இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், இந்த சம்பவம் குறித்த தகவல்கள் வெளியே கசிந்துள்ளது.

 

அதன்பேரில் மண்டல வனப் பாதுகாவலர் பெரியசாமி, மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு ஆகியோர் உத்தரவின் பேரில், தர்மபுரி மாவட்ட உதவி வனப் பாதுகாவலர் வின்சென்ட், அரூர் வனச்சரகர் நீலகண்டன் மற்றும் வனத்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்தில் தோண்டிப் பார்த்தனர். அங்கு புதைக்கப்பட்ட காட்டு மாட்டின் உலர்ந்த கொம்புடன் கூடிய தலை மற்றும் சிதைந்த நிலையில் மாட்டின் எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.

 

இதையடுத்து சட்ட விரோதமாக மின் வேலி அமைத்து, காட்டு மாட்டை கொன்றதாக ராமச்சந்திரன், சக்திவேல், சின்னராமன் ஆகியேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களை அரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு சிறையில் அடைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘வெள்ளியங்கிரி மலைக்கு செல்வோர் கவனத்திற்கு...’- வனத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Important information for Velliangiri hill travelers

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இத்தகைய சூழலில் சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.