/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/arrested-2_21.jpg)
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மரக்காணம் சாலை பகுதியைச் சேர்ந்த கனரக வாகன விற்பனையாளராக செயல்பட்டு வந்த ராஜகோபால் என்பவரது மகன் சேகர். இவர் திண்டிவனம் அருகில் உள்ள பெருமுக்கல் பகுதியில் இருந்த ஒரு கனரக வாகனம் ஒன்றை வாங்குவதற்கு முடிவு செய்துள்ளார். கடந்த அக் 4ஆம் தேதி அதற்கு தேவையான பணத்தை திண்டிவனத்தில் உள்ள இரண்டு தனியார் வங்கிகளில் இருந்து 4 லட்ச ரூபாயும் நண்பர்களிடமிருந்து மூன்று லட்ச ரூபாயும் சுமார் ஏழு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து தனது இருசக்கர வாகனத்தில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டி கொண்டு புறப்பட்டுள்ளார்.
அப்படி செல்லும்போது சேடன் குட்டை பகுதியில் சாலை ஓரமாக தனது வாகனத்தை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்கச் சென்றுள்ளார். மீண்டும் வந்து பார்த்த போது அவரது இருசக்கர வாகனத்தில் இந்த பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைக்கண்டு பெரும் அதிர்ச்சியடைந்த சேகர் உடனடியாக திண்டிவனம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாத், திண்டிவனம் ஏஎஸ்பி அபிஷேக் குப்தா மேற்பார்வையில் ஆய்வாளர் புகழேந்தி, உதவி ஆய்வாளர் தமிழ்மணி தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு அந்த தனிப்படை போலீஸ் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
நேற்று முன்தினம் பெருமாள் கோவில் தெருவில் சுற்றிக் கொண்டிருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அவர்கள் 3 பேரும் தெலுங்கில் பேசி உள்ளனர். இதையடுத்து நன்கு தெலுங்கு பேச நபரை தேடிப்பிடித்து அழைத்து வந்து மூவரிடமும் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் மூவரும் ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த 22 வயது ராஜு, 44 வயது சர்க்கரையா, 39 வயது ரமேஷ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் மூவரும் சேகரின் இருசக்கர வாகனத்தில் இருந்து 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டனர். மேலும் இவர்கள் மூவரும் மேல்மலையனூர், செஞ்சி, விழுப்புரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து திருட்டு மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இவர்களிடமிருந்து ஒரு கார் இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில்அடைத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)