/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thiruvallur--train-art_0.jpg)
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பிகார் மாநிலம் தர்பங்காவிற்கு ‘பாக்மதி எஸ்பிரஸ்’ என்ற பயணிகள் ரயில் (ரயில் எண் : 12578) இயக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் வழக்கம் போல் பெரம்பூரில் இருந்து இன்று (11.10.2024) இரவு 07.44 அளவில் புறப்பட்ட இந்த ரயில், 08.27 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்புறத்தில் இந்த ரயில் வேகமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு 2 பெட்டிகள் எரிந்து வருகின்றன. அதோடு பயணிகள் விரைவு ரயிலின் 4 ஏசி பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள், மீட்புக்குழுவினர் ரயில்கள் விபத்துக்குள்ளான இடத்திற்கு விரைந்துள்ளனர். அதேசமயம் கவரைப்பேட்டை அருகே உள்ள மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தகவல் தெரிவித்துள்ளார். பயணிகள் விரைவு ரயிலில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thiruvallur--train-art-1.jpg)
பயணிகள் விரைவு ரயில் விபத்து ஏற்பட்ட பகுதியில் மீட்புப் பணிக்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) வீரர்கள் 30 பேர் ரயில் விபத்து பகுதிக்கு விரைந்துள்ளனர். திருவள்ளூர் அடுத்த கவரைப்பேட்டை அருகே பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் தவறான சிக்னல் காரணமாக ரயில் விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இரவு 08.27 மணியளவில் பச்சை சிக்னல் கொடுக்கப்பட்டதால் பயணிகள் விரைவு ரயில் இயக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக ரயில் செல்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சுமார் 109 கி.மீ வேகத்தில் சென்ற ரயிலை லூப் லைனில் செல்லும்போது 90 கி.மீ வேகத்திற்கு ஓட்டுநர் குறைத்துள்ளார். இருப்பினும் பிரதான லைனில் இருந்து லூப் லைனிற்கு பயணிகள் விரைவு சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் மோதி விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ரயில் விபத்து தொடர்பாக உதவி தேவைப்படுபவர்கள் தொடர்புகொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே உதவி தேவைப்படுவோர் 044- 2535 4151, 044 - 2435 4995, 044 - 25330952, 044 - 2533 0953 இந்த எண்களைத் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)