திருப்பூர் மாவட்டம் அவினாசி ரோடு அருகே உள்ள விவேகானந்தா ஆசிரமத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக அரசிற்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரி மணிவாசகம் தலைமையில் விசாரணைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நேற்று சம்பந்தப்பட்ட காப்பகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காப்பக நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. எனவே காப்பக உரிமையாளர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இந்த காப்பகம் மூடப்பட்டு ஈரோட்டில் உள்ள அரசு காப்பகத்தில் இங்கிருந்த குழந்தைகள் தங்கவைக்கப்படுவர் என தெரிவித்திருந்தார். உயிரிழந்த சிறுவர்களின் உடல்கள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் திருப்பூர் மின்மயானத்தில் எரியூட்டப்பட்டது. இந்நிலையில் தற்போது அந்த காப்பகம் மூடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் முன்னிலையில் அவிநாசி வட்டாட்சியர் ராஜேஷ் தலைமையில் வந்த போலீசார் காப்பகத்தை மூடி சீல் வைத்தனர். மேலும் காப்பகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.