திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரைச் சேர்ந்தவர் வாலிபர் ஒருவர். இவர் நகரின் மையப் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, பெற்றோர், தம்பி ஆகியோருடன் ஒரே குடும்பமாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் வாலிபருக்கும் அவரது நண்பனின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது, நாளடைவில் முறையற்ற தொடர்பாக மாறியதால் வாலிபர் வீட்டை விட்டு வெளியேறி நண்பனின் மனைவியுடன் வேறு ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். இரண்டு பேரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர் என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் வாலிபரின் தந்தை திடீரென உயிரிழந்து விட்டார். தந்தையின் இறுதிச்சடங்குகள் செய்ய வாலிபர் தனது வீட்டிற்கு சென்றார். இறுதி சடங்குகள் முடிந்ததும் வாலிபரின் மனைவி, கணவரை முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணின் வீட்டுக்கு மீண்டும் செல்லவிடாமல் தடுத்து வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
கடந்த ஒரு வார காலமாக வாலிபருடன் முறையற்ற தொடர்பில் இருந்த பெண் அவரை பலமுறை முயற்சித்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை, அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அப்பெண் வாலிபரை பல இடங்களில் தேடினார். அப்போது அவர் தனது முதல் மனைவியுடன் வேறு ஒரு இடத்தில் வசித்து வருவதும் தெரிய வந்தது. அங்கு விரைந்து சென்ற அப்பெண் வாலிபர் வசித்து வரும் வாடகை வீட்டின் கண்ணாடிகளை கல் வீசி தாக்கியதோடு அங்கேயே கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இதுகுறித்து புகார் அளிப்பதற்காக சம்பந்தப்பட்ட செல்போன் கடை வாலிபர் தனது முதல் மனைவியுடன் வாணியம்பாடி நகர காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு வாலிபர் புகார் அளிக்க வந்திருப்பது குறித்து தெரிந்தது, உடனே அவர் காவல் நிலையத்திற்கு விரைந்து வந்தார். அப்போது அங்கு வந்து இருந்த வாலிபரை பிடித்த அந்தப்பெண் 'என்னுடன் வாழு வா' என சட்டையை பிடித்து இழுத்தார். அவர் வர மறுத்ததால் அவரை தாக்கினார்.
இதை பார்த்து கோபமான வாலிபரின் மனைவி, 'என் கணவரையா அடிக்கற' என கணவரின் முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணை தாக்கினார். இது நகர காவல் நிலையம் முன்பாக நடைபெற்றது. இரண்டு பெண்களும் காவல் நிலையம் முன்பாக கட்டி புரண்டு சண்டை போட்டனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியான போலீசார், அவர்களை சமாதானம் செய்ய வந்து அடித்துக்கொண்ட இருவரையும் விலக்கி விட்டனர். அவர்கள் போலீசாரையும் தள்ளிவிட்டு இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதனை கண்டு மேலும் அதிர்ச்சியடைந்த நகர காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீசாரும், அங்கேயே உள்ள அனைத்து மகளிர் பெண் போலீசாரும் ஓடி வந்து அவர்களை தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்து அங்கிருந்து அனுப்பினர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.