Skip to main content

சுவர் ஏறிக்குதித்து, கதவை உடைத்து ப.சிதம்பரம் கைது; இந்தியாவில் நடப்பது சட்டத்தின் ஆட்சி தானா?  திருமா

Published on 22/08/2019 | Edited on 22/08/2019

 


ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள கண்டனம்:  ’’முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்  மிகவும் அநாகரீகமான முறையில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரது வீட்டின் சுவர் ஏறிக் குதித்து சிபிஐ அதிகாரிகள் அவரைக் கைது செய்துள்ள முறை ஜனநாயக நாட்டில் ஏற்கத்தக்கதல்ல.  சிபிஐ , வருமானவரித்துறை ஆகியவற்றை இந்த அரசு தனது ஏவல் ஆட்களாகப் பயன்படுத்துகிறது என்பதற்கு இன்றைய சம்பவங்கள் சாட்சியமாக இருக்கின்றன. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். 

t

 

 ப.சிதம்பரம் தலைமறைவாக இருக்கிறார் என்ற பொய்ச்செய்தியை மக்கள் மத்தியில் ஆளும் பாஜக அரசு பரப்பிக் கொண்டிருந்த நேரத்தில் அவர் டெல்லியிலுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில்  பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் தன் பெயரோ தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பெயரோ குறிப்பிடப்படவில்லை என்று தெரிவித்த  ப. சிதம்பரம்,  கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்பதையும் செய்தியாளர்களிடம் விவரித்தார். 

 

‘உயிரா? சுதந்திரமா? எனத் தம்மிடம் கேட்கப்பட்டால் தான் சுதந்திரத்தைத்தான் தேர்வு செய்வேன்’ என்று உறுதிபடத் தெரிவித்தார். செய்தியாளர்கள் சந்திப்புக்குப் பின் தனது வீட்டுக்குச் சென்றார். அவர் வீட்டுக்குள் இருப்பது தெரிந்திருந்தும் ஊடகவியலாளர்கள் கண்முன்னாலேயே சிபிஐ அதிகாரிகளும், வருமானவரித்துறை அதிகாரிகளும் சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் சென்றனர்.

 

வீட்டின் பின் பக்கக் கதவை உடைத்துக்கொண்டு சில சிபிஐ அதிகாரிகள் உள்ளே வந்ததாகவும் கூறப்படுகிறது. இப்படி தேவையில்லாமல் அவரை அவமானப்படுத்திக் கைது செய்துள்ளனர் . இது இந்தியாவில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா?  என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மத்திய அரசின் இந்தப் பழிவாங்கும் போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். விசாரணையின்போது அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்,  அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்’’
 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
vck president thirumavalavan anoounced 20204 ambedkar sudar award to prakash raj

பிரகாஷ் ராஜ், நடிப்பைத் தாண்டி சமூக நலன் சார்ந்த பணிகள், அரசியல் என மற்ற தளங்களிலும் பயணித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி குறித்தும், மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில் ஏழு கட்ட வாக்குப்பதிவில், இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. அந்த வகையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது, பெங்களூருவில் வாக்களித்த பிரகாஷ் ராஜ், மாற்றத்திற்காக மற்றும் வெறுப்பிற்கு எதிராக வாக்களித்ததாக கூறினார். 

இந்த நிலையில் வி.சி.க. சார்பில் பிரகாஷ் ராஜுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வி.சி.க. சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சிறப்பாக தொண்டாற்றும் நபர்களுக்கு, ‘அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு’ ஆகிய பெயர்களில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 

2007ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், 2024ஆம் ஆண்டிற்கான ‘அம்பேத்கர் சுடர்’ விருதை பிரகாஷ்ராஜுக்கு வழங்குவதாக வி.சி.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வி.சி.க. வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருபவர் பிரகாஷ்ராஜ்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விருதுகள் அடுத்த மாதம் 25ஆம் தேதி, (25.05.2024) சென்னையில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவின் போது திருமாவளவனும்,பிரகாஷ் ராஜும் சந்திப்பு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது சி.பி.ஐ. (எம்.எல்) கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யாவிற்கு வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.  

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.