Skip to main content

விளவங்கோடு எம்.எல்.ஏ.வாக தாரகை கத்பெர்ட் பதவியேற்பு!

Published on 12/06/2024 | Edited on 12/06/2024
Tharahai Cuthbert sworn in as vilavancode mla 

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அமைத்துள்ளது.

முன்னதாக காங்கிரஸிலிருந்து விலகிய எம்எல்ஏ விஜயதரணி பாஜகவில் சேர்ந்த நிலையில் விளவங்கோடு காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலோடு விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்ட தாரகை கத்பெர்ட் வெற்றி பெற்றார். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் முன்னிலையில், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தாரகை கத்பெர்ட் சட்டமன்ற உறுப்பினராக இன்று (12.06.2024) காலை 10.25 மணியளவில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், சட்டமன்றப் பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி, அரசு தலைமைக் கொறடா கோவி. செழியன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை, நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ் குமார், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சட்டமன்றப் பேரவைச் செயலாளர் கி. சீனிவாசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 

சார்ந்த செய்திகள்