Skip to main content

நகைப்பெட்டி தயாரிக்கும் ஆலையில் பயங்கர தீ விபத்து!

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
A terrible fire in a jewelry box factory

கோவை மாவட்டம், மதுக்கரை அறிவொளி நகர்ப் பகுதியில், தங்க நகைப் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த நிலையில், இந்த ஆலையில் இன்று (08-02-24) திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த பயங்கர தீ விபத்தால், இந்த ஆலை முழுவதும் சேதம் அடைந்தது.

ஆலையில் தீ விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களிலேயே அங்குள்ள தொழிலாளர்கள் அந்த ஆலையை விட்டு வெளியேறிவிட்டனர். இதனால், எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த கோவை புதூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும், விபத்தின் போது சமையல் சிலிண்டர் பயன்பாட்டில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

துப்பாக்கி முனையில் நகைகள் கொள்ளை சம்பவம்; தனிப்படை போலீசார் அதிரடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
avadi jewelry incident police in action

சென்னையை அடுத்துள்ள ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவர் ‘கிருஷ்ணா ஜுவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நகைக்கடைக்கு கடந்த 15 ஆம் தேதி (15.04.2024) நண்பகல் 12 மணியளவில் 5 மர்ம நபர்கள் தமிழக பதிவெண் கொண்ட மாருதி ஸ்விஃப்ட் காரில் வந்துள்ளனர். இவர்களில் 4 பேர் கடையின் உரிமையாளரான பிரகாஷின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டுத் துப்பாக்கி முனையில் நகைக் கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்தச் சம்பவம் குறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், அந்தக் கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களின் பதியப்பட்ட காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடை உரிமையாளரின் கை, கால்களை கட்டிப்போட்டு நகைக்கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

avadi jewelry incident police in action

இதனையடுத்து நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டிருந்தனர். இது குறித்து கூடுதல் கமிஷனர் ராஜேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ‘பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்களைப் பிடிக்க 8 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றோம். மேலும், கொள்ளையர்கள் வந்த காரின் எண் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அடையாளங்களை வைத்து குற்றவாளிகளை தேடும் பணியை மேலும் தீவிரப்படுத்தி வருகிறோம்’ எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த நகைக்கடையில் கைவரிசை காட்டியது வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொள்ளையர்களை ஆந்திரா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதே சமயம் கொள்ளையர்கள் காரை பயன்படுத்தாமல் ரயில் அல்லது விமானம் மூலம் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும், கொள்ளையர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தகவல் தெரிவித்திருந்தனர். சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் பதிவெண்ணை போலீசார் கண்டுபிடித்திருந்தனர். 

avadi jewelry incident police in action

இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதாக கூறி தினேஷ் குமார் மற்றும் சேட்டன்ராம் ஆகியஇருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் தற்போது சென்னையில் தங்கி இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

Next Story

பர்னிச்சர் கடையில் பயங்கர தீ விபத்து; 10 லட்ச ரூபாய் பொருட்கள் சேதம்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
fire breaks out in furniture shop at midnight in Erode

ஈரோடு பெரியவலசு, கொங்கு நகர் 3-வது வீதியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவர் அதே பகுதியில் கடந்த பல வருடங்களாக வீடு மற்றும் கடைகளுக்கு தேவையான பர்னிச்சர் பொருள்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். இவரது கடையில் சுமார் 5-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கடையில் மரச் சாமான்கள் அதிக அளவில் இருந்தன.

இந்த நிலையில் பொன்னுச்சாமி நேற்று இரவு வேலையை முடித்து விட்டு வழக்கம் போல் கடையை பூட்டிச் சென்று உள்ளார்.  நள்ளிரவு 2 மணி அளவில்  இவரது கடையில் இருந்து தீ பரவி வருவதாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் . சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர்  தீயை அணைக்க போராடினர். மர சாமான்கள் மற்றும் எந்திரங்கள் அதிக அளவில் இருந்ததால் தீ கொளுந்து விட்டு எரிந்தது.

தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில்  கடையில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள மரப் பொருள்கள் மற்றும் மெஷின்கள் முற்றிலும் சேதம் அடைந்தன. மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நல்ல வேலையாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்து பர்னிச்சர் கடையை சுற்றி ஏராளமான குடியிருப்புகளும் இருந்தன.