Skip to main content

கணவன் இறந்தது மனைவிக்குத் தெரியாமல் அடக்கம்... கரோனா கொடுமை!

Published on 29/07/2020 | Edited on 29/07/2020

 

tenkasi district communixt party of india leader incident coronavirus

 

தென்காசி மாவட்டத்தின் ஆலங்குளம் சமீபமாக உள்ள நெட்டூரைச் சேர்ந்தவர் ராஜாங்கம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒழுங்கிணைந்த நெல்லை தென்காசி மாவட்டத்தின் பீடித் தொழிலாளர்களின் சம்மேளத்தின் மூத்த தலைவர். விபரம் தெரிந்த காலம்தொட்டே தன்னை மார்க்சிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்ட ராஜாங்கம், கட்சி மட்டத்தில் பல பதவிகளை வகித்தவர், தன் போராட்டக்குணம் காரணமாக லட்சக்கணக்கான பீடித் தொழிலாளர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத்தந்திருக்கிறார்.

 

வயது மூப்புகாரணமாக, நெல்லையை விட்டுத் தனது சொந்தக் கிராமமான நெட்டூரில் வசித்த ராஜாங்கம் உடல்நலக் குறைவு காரணமாக பாளை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் பின்பு தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனிடையே அவருக்கு கரோனா சோதனை எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. சிகிச்சையின் போதே மருத்துவமனையிலேயே இயற்கை எய்தினார் ராஜாங்கம்.

 

அதேசமயம் ராஜாங்கத்தின் மனைவியாரைத் தொற்று பரவக்கூடும் என்பதால் அவரை நோய்த் தனிமைப்படுத்தல் முகாமில் ஐந்து நாட்கள் தங்கவைத்து கணவரின் மரணச் செய்தியைக் கூட அதிகாரிகள் அவருக்குத் தெரியப்படுத்தாமல் செய்துவிட்டனர்.

 

தனது வாழ்நாள் முழுக்க மரணம் வரை கடைக்கோடிக் கூலித் தொழிலாளர்களுக்காகவும், பீடித் தொழிலாளர்களுக்கும் போராடி அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத்தந்த மக்கள் அபிமானி ராஜாங்கம். பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட அவரின் மரணச் செய்தியைக் கூட அவரது துணைவியாருக்குத் தெரியப்படுத்தாமலிருந்ததைக் கண்டனம் செய்த எம்.ஜி.ஆர். மக்கள் கட்சியின் நிறுவனரான ரவிக்குமார், இனிமேலும் இது போன்ற நிகழ்வுகள் வேறு நபர்களுக்கு நடக்காமலிருக்க வேண்டும் என்று தன் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

 

மரணமடைந்தவரின் முகத்தை உறவினர்கள் கூட பார்க்க முடியாத கொடுமை மட்டுமல்ல, அவர்களின் மத வழக்கப்படியான ஈமக்கிரியைகளைக் கூடச் செய்யவிடாமல் அந்த ஆன்மாவை அலைபாய வைத்திருக்கிறது கொடூரக் கரோனா.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஈஷா யோகா மையம் தொடர்பான விவகாரம்; வெளியான பகீர் தகவல்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Matter relating to Isha Yoga Centre; Released information

தென்காசி மாவட்டம் குலசேகரப்பட்டியைச் சேர்ந்த விவசாயியான திருமலை என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘தன் சகோதரர் கணேசன் என்ற சுவாமி பவதத்தா தன்னார்வலராக கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். இத்தகைய சூழலில் கடந்த ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி ஈஷா யோகா மையத்தில் இருந்து தொடர்பு கொண்டவர்கள் கணேசன் சொந்த ஊருக்கு வந்துள்ளார்களா என்று கேட்டதுடன் கடந்த 3 நாட்களாக கணேசன் ஈஷா யோகா மையத்திற்கு வரவில்லை என கூறினர்.

இது தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி  ஈஷா யோகா மைய பொறுப்பாளர் தினேஷ் ராஜா கோவை மாவட்டம் பாரந்துறை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்த பாரந்துறை காவல் நிலைய போலீசார் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் இருக்கின்றனர். எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி காணாமல் போன தனது சகோதரர் கணேசனை மீட்டுத் தர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார்.

Matter relating to Isha Yoga Centre; Released information

இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள், எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வு முன்பு இன்று (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜதிலக், “கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஈஷா மையத்தில் பணியாற்றியவர்களில் வெவ்வேறு தேதிகளில் தற்போது வரை 6 பேர் மாயமாகியுள்ளனர்” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “காணாமல் போனவர்கள் பற்றிய வழக்கை துரிதப்படுத்தி விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்படுகிறது. மேலும் இந்த வழக்கு ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” எனத் தெரிவித்தனர். 

Next Story

சாதுரியமாகச் செயல்பட்ட முதிய தம்பதியினர்; வீட்டிற்குச் சென்று பாராட்டிய ரயில்வே அதிகாரி!

Published on 01/03/2024 | Edited on 02/03/2024
An elderly couple who acted astutely Railway officer who went home and appreciated

தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் புளியரை கிராமம், 'எஸ்' - வளைவு என்ற தமிழக - கேரள எல்லைப் பகுதியில் கடந்த 25 ஆம் தேதி (25.02.2024) நள்ளிரவு 1.00 மணி அளவில் திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது இந்த லாரி நிலை தடுமாறி 40 அடி உயரத்திலிருந்து கவிழ்ந்து கீழே செல்லும் செங்கோட்டை - கொல்லம் ரயில் மார்க்கத்திலுள்ள தண்டவாளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது. அப்போது அப்பகுதியில் வசித்து வந்த சண்முகையா - வடக்குத்தியாள் என்ற தம்பதியினர் செங்கோட்டையிலிருந்து புனலூர் நோக்கி வந்துகொண்டிருந்த பகவதியம்மன் கோவில் திருவிழா சிறப்புப் பயணிகள் ரயில் வரும் சத்தத்தைக் கேட்டு நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துள்ளனர். அதன் பின்னர் தண்டவாளத்தில் சிறிது தூரம் ஓடிச்சென்று கையில் வைத்திருந்த டார்ச் லைட் ஒளியின் மூலம் ரயில் ஓட்டுநரிடம் சைகை காண்பித்து ரயிலை நிறுத்தி ஏற்படவிருந்த பெரும் விபத்தை தடுத்துள்ளனர்.

மேலும் இது குறித்து உடனடியாகத் தகவலறிந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பொதுமக்களுடன் இணைந்து தண்டவாளத்தில் விழுந்து கிடந்த லாரியினை அப்புறப்படுத்தியுள்ளனர். அதே சமயம் சென்னையிலிருந்து கொல்லம் நோக்கிச் சென்ற விரைவு ரயிலும் செங்கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. தங்களது முதிர்ந்த வயதையும், இருள் சூழ்ந்திருந்த நள்ளிரவு நேரத்தையும் பொருட்படுத்தாமல், பெரும் விபத்து நிகழ்வதைத் தடுத்து நிறுத்தும் ஒரே நோக்கத்துடன் தண்டவாளத்தில் ஓடிச்சென்று ரயிலை நிறுத்திய சண்முகையா - வடக்குத்தியாள் தம்பதியினரின் வீரதீரச் செயலைப் பாராட்டிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் வெகுமதி வழங்க உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 27 ஆம் தேதி (27.2.2024) தலைமைச் செயலகத்தில் சண்முகையா - வடக்குத்தியாள் அத்தம்பதியரின் வீரதீரச் செயலை பாராட்டி, அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வெகுமதியாக வழங்கி பாராட்டினார். அப்போது தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உடன் இருந்தார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “தென்காசி மாவட்டம் புளியரை அருகே தண்டவாளத்தில் லாரி விழுந்து விபத்து ஏற்பட்டதை அறிந்து, பொறுப்புடன் செயல்பட்டு அந்த வழியாக வந்த இரயிலை ‘டார்ச்’ லைட் சைகையால் நிறுத்தி, நிகழவிருந்த விபத்தைத் தடுத்த சண்முகையா – வடக்குத்தியாள் இணையரின் செயலுக்கு எனது பாராட்டுகள்!. எளியோரின் பேருள்ளத்துக்கு இணையேதுமில்லை!” எனக் குறிப்பிட்டிருந்தார்.

An elderly couple who acted astutely Railway officer who went home and appreciated

இந்நிலையில், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா இந்த ரயில் விபத்தை தவிர்த்த செங்கோட்டையைச் சேர்ந்த சண்முகையா – வடக்குத்தியாள் தம்பதியரை புளியரையிலுள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினார். அதனைத் தொடர்ந்து பகவதிபுரம் ரயில் நிலையத்தில் நடந்த பாராட்டு விழாவில் இத்தம்பதியருக்கு பாராட்டு சான்றிதழும், ரொக்கப் பரிசும் வழங்கி சரத் ஸ்ரீவத்சவா கவுரவித்தார். இந்நிகழ்வில் மதுரை கோட்ட ரயில்வே முதுநிலை பொறியாளர் எம். பிரவீனா, கோட்ட ஊழியர்கள் நல அதிகாரி டி. சங்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.