Skip to main content

51 நாட்களாக நாங்குநேரியில் தவித்த ஆன்மிகச் சுற்றுலாப் பயணிகள் சொந்த ஊர் பயணம்!

Published on 15/05/2020 | Edited on 15/05/2020

 

telankana tourist in nellai district back to home


கடந்த மார்ச் 18- ஆம் தேதி அன்று தெலுங்கானா மாநிலமான செகந்திராபாத்திலிருந்து தமிழகத்திற்கு ஆன்மிக சுற்றுலா வந்த ஆண்கள், பெண்கள் உட்பட 33 பேர்கள் நெல்லை மாவட்டத்தின் முக்கிய ஆலய நகரமான நாங்குநேரியின் வானமாமலை பெருமாள் கோவிலுக்கு வந்தனர். சில முக்கிய பூஜை நிகழ்ச்சியின் பொருட்டு அவர்கள் இங்கு தங்கிய நிலையில், திடீரென்று மார்ச் 24 ஆம் தேதி அன்று கரோனா தடுப்பு நடவடிக்கையாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டு பின் அது தொடர்ந்து நீடிக்கப்பட்டது.


இதனால் அவர்கள் ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர். நாங்குநேரி வானமாமலை ஆலயத்திற்குச் சொந்தமான மடத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் தொற்று காணப்படவில்லை. 51 நாட்களாக மடத்தில் தங்கிய அவர்களுக்கு ஆலயம் சார்பிலும், சமூக ஆர்வலர்களும் உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு தடையின்றி வழங்கப்பட்டது.

இதனிடையே இவர்கள் தங்களின் சொந்த மாநிலம் செல்வதற்காக இருமுறை இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்தும் மறுக்கப்பட்டதால். தமிழக அரசு மற்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் போன்றவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து தகவல் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டு, பின்னர் அவர்கள் ஊர் செல்ல இ-பாஸ் மற்றும் பஸ் வசதி கோரியதையடுத்து அதற்கான அனுமதிகள் கிடைத்தன. அவர்கள் செகந்தராபாத் செல்வதற்காக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலம் பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான இ-பாஸ் வழங்கப்பட்டது.

 

 


இதையடுத்து மடத்தில் தங்கியிருந்த செகந்திராபாத்தைச் சேர்ந்த ஸ்ரீ ராம் முரளிதர், ஜோதி. ஸ்ரீமன் நாராயணா, ராதாகிருஷ்ணா, விஜயலட்சுமி உள்ளிட்ட 30 பேர்களும் அரசு பஸ் மூலம் செகந்திராபாத் புறப்பட்டுச் சென்றனர். கடந்த 50 நாட்களாக அவர்களிடம் பாசம், நேசத்துடன் பழகிய அக்கம் பக்கத்தினர் மற்றும் மடத்தின் ஊழியர்கள் கண்ணீர் மல்க அனுப்பி வைத்தனர்.
 

அவர்கள் ஊர் திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்த மாவட்ட ஆட்சியர் ஷில்பா, டி.ஆர்.ஓ. முத்துராமலிங்கம், பயிற்சி உதவி கலெக்டர் சிவகுரு உள்ளிட்ட அனைவருக்கும் வானமாமலை மடத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

புதிய தமிழகம் கிருஷ்ணசாமியைத் தடுத்து நிறுத்திய வனத்துறை; கட்சியினர் வாக்குவாதம்

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
nn

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சுமார் 75,000 ஏக்கர் பரப்பளவு காடுகளில் 8,000 ஏக்கர் நிலப்பரப்பு தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனத்திற்காக 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. இந்தக் குத்தகை 2028 ஆம் ஆண்டில் முடிவடைகிறது. மாஞ்சோலை, மணிமுத்தாறு, ஊத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொழிலாளர்கள் தங்கி அங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றி வந்தனர்.

குத்தகை முடிவதற்கு முன்பாகவே தனியார் நிறுவனம் ஒன்று தங்களுடைய பணியை நிறுத்திக் கொள்வதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனையடுத்து, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தங்களுடைய நலனுக்காக விருப்ப ஓய்வு பெற்றுக் கொள்ளலாம் என இதற்கான அறிவிப்பை தனியார் நிறுவனம் நோட்டீஸ் வாயிலாக வெளியிட்டது. மேலும், அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையிலும் அந்தத் தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் இருந்து ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு முன்னதாக தொழிலாளர்கள் வெளியேற வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் திருநெல்வேலி மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா என்பவர் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘மாஞ்சோலையில் இரண்டு மூன்று தலைமுறைகளாக வசித்து வருகிறோம். மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திற்கான உரிமம் வருகிற 2028 ஆம் ஆண்டில்தான் முடிவடைகிறது. இந்த உரிமத்தை புதுப்பிதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்காமல், இங்கு வாழக்கூடிய மக்களை அங்கிருந்து காலி செய்யக்கூடிய நடவடிக்கையை அரசும், தேயிலைத் தோட்ட நிர்வாகமும் எடுத்து வருகிறது. எனவே, இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்.

அங்கு பணிபுரியும் தொழிலாளர்களை வெளியேற்றுவதால் மறுவாழ்வுக்கான எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. குறிப்பாக, மாஞ்சோலையில் இருந்து தொழிலாளர்கள் வெளியேற்றப்படும் போது மாஞ்சோலையைச் சேர்ந்த 700 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும். மேலும், மறு பணி வாய்ப்பு வழங்கும் வரை ஒரு குடும்பத்திற்கு ரூ.10,000 வழங்க வேண்டும். இழப்பீடு தொகையை அதிகரித்து கொடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்கும் வரை மாஞ்சோலையில் இருந்து யாரும் வெளியேற்றும் நடவடிக்கையை எடுக்கக் கூடாது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான மனு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிமன்றம், ‘நெல்லை மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. மேலும், தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்து தரும்வரை யாரையும் வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது’ என்று உத்தரவிட்டுள்ளது.

nnஇந்நிலையில் நெல்லையில் மாஞ்சோலை மக்களைச் சந்திப்பதற்காக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி சென்றுள்ளார். அனுமதியை மீறி அவர் அதிகமாக வாகனங்களில் சென்றதாக மணிமுத்தாறு சோதனை சாவடியில் வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகள் வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்குச் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

“திருப்பதி செல்வோர் கவனத்திற்கு...” - தமிழக அரசு முக்கிய தகவல்!

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
Attention of Thirupati pilgrims TN Govt Important announcement

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஒரு நாள் சுற்றுலா திட்டமான, திருப்பதி தொகுப்பு சுற்றுலா திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 400 நபர்கள் வரை சுற்றுலா செல்லலாம் எனத் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகத் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,“தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தினால் இயக்கப்பட்டு வரும் சுற்றுலா திட்டங்களில் அதிக அளவில் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சுற்றுப்பயணம். திருப்பதி ஒரு நாள் சுற்றுலாவாகும். அதன்படி திருப்பதி சுற்றுலா செல்லும் பேருந்து, சென்னை வாலாஜா சாலை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகமான சுற்றுலா வளாகத்திலிருந்து தினசரி காலை 4.30 மணிக்குச் சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்கின்றது. 

Attention of Thirupati pilgrims TN Govt Important announcement
கோப்புப்படம்

ஒவ்வொரு பேருந்திலும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி பணியில் ஈடுபடுவார். வழிகாட்டிகள் திருப்பதி சுற்றுலா பயணிகளுக்குத் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சுற்றுலா பயணத்திற்கான விளக்கங்களை அளிப்பார். சுற்றுலா பயணிகளுக்குக் காலை உணவு திருத்தணி ஓட்டல் தமிழ்நாடு உணவகத்தில் வழங்கப்படுகின்றது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு, திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு அனுமதியாக வழங்கிய விரைவு தரிசன அனுமதிச் சீட்டின் மூலம் சுற்றுலா பயணிகள் தரிசனம் செய்த பின்னர் சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் நபர் ஒருவருக்குத் திருப்பதி லட்டு ஒன்று வழங்கப்படுகின்றது. மேலும் மதிய உணவுக்குப்பின் திருச்சானுார் சென்று பத்மாவதி அம்மனை தரிசனம் செய்த பிறகு இரவு உணவு வழங்கப்பட்டு மீண்டும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் சுற்றுலா பயணிகளைக் கொண்டு சேர்த்து திருப்பதி சுற்றுலா பயணம் முடிவு பெறுகின்றது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத் திட்டங்களுக்கு முன்பதிவு செய்யத் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் www.ttdconline.com இணையதள பக்கத்திலும், அல்லது சென்னை வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேரடியாகவும் முன்பதிவு செய்யலாம். திருப்பதி சுற்றுலா குறித்த கூடுதல் விவரங்களைத் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தொலைப்பேசி எண்களான 180042531111 (கட்டணமில்லா தொலைபேசி எண் - Toll free), 044-25333333 மற்றும் 044-25333444 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.