Skip to main content

மாணவர்களை வேலை வாங்கிய ஆசிரியர்; உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரி 

Published on 21/10/2022 | Edited on 21/10/2022

 

teacher suspended who employed students

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் உள்ள ஆலம்பூண்டியில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவர்களுக்கு இடையிலான திறனறிவு தேர்வு போட்டி நடைபெற்றுள்ளது. அதில் பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வந்து கலந்து கொண்டுள்ளனர். அதன் காரணமாக மாணவர்கள் அமர்ந்து தேர்வு எழுதுவதற்கு தேவையான மேஜை, நாற்காலிகள் பள்ளியில் இல்லாததால் அருகில் உள்ள சத்தியமங்கலம் பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளியில் இருந்து மேஜை நாற்காலிகளை தற்காலிக தேவைக்காக இரவல் பெற்றுள்ளனர். தேர்வு முடிவடைந்த நிலையில் இரவலாக பெறப்பட்ட மேஜை, நாற்காலிகளை சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியிடம் மீண்டும் ஒப்படைப்பதற்காக ஆலம்பூண்டி பள்ளியில் இருந்து ஒரு விவசாய டிராக்டரில் இணைக்கப்பட்ட டிப்பரில் ஏற்றியுள்ளனர்.

 

அவை கீழே விழுந்து விடாமல் இருப்பதற்காகவும், அந்தப் பள்ளியில் கொண்டு போய் இறக்கி வைக்கும் பணிக்காகவும் சுமார் 10க்கும் மேற்பட்ட மாணவர்களை அந்த வாகனத்தில் ஏற்றி ஆசிரியர்கள் அனுப்பி வைத்துள்ளனர். டிராக்டரில் நின்றபடி மேஜை நாற்காலிகள் சாலையில் விழுந்து விடாமல் இருப்பதற்காக பிடித்துக்கொண்டே மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. 

 

இந்த நிலையில் மாணவர்களை டிராக்டரில் ஆபத்தான முறையில் பயணம் செய்ய வைத்ததற்காக ஆலம்பூண்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசாமி, உடற்கல்வி ஆசிரியர் பழனி ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்தவும் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.  இந்தப் பள்ளி மாணவர்களை பாதுகாப்பற்ற முறையில் அனுப்பி வைத்தது தவறாக இருக்கலாம். அதே நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளில் மாணவ மாணவிகளைக் கொண்டு பள்ளியை கூட்டிப் பெருக்கியதற்காகவும், பள்ளி கழிவறையை சுத்தம் செய்வதற்காகவும் பள்ளி வளாகத்தில் உள்ள செடி கொடிகளை அப்புறப்படுத்தி தோட்டம் அமைத்ததற்காகவும் ஆசிரியர்கள் மீது கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  இது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

“எனதருமை மாணவச் செல்வங்களே...” - முதல்வர் வாழ்த்து

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Chief Minister Stalin congratulates students appearing for 10th public exam

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது.  செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே... All the best!  நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதி செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.