Skip to main content

ஓராண்டில் மதுபானங்களை அதிகவிலைக்கு விற்றதாக 9,319 வழக்குகள்! -உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் விளக்கம்!

Published on 26/06/2020 | Edited on 26/06/2020
tasmac highcourt

 

டாஸ்மாக் மதுபானக் கடைகளில்,  அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்ததாக,  2019 ஏப்ரல் முதல் 2020 மார்ச் வரையில் நடத்தப்பட்ட சோதனைகளில், 9 ஆயிரத்து 319 வழக்குகள் கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகக்கூறி, சேலம் மாவட்டம், ஜாரி கொண்டலாம்பட்டி  பஞ்சாயத்து  துணைத் தலைவர் குல்லு படையாச்சி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், கடந்த 2003-ம் ஆண்டு டாஸ்மாக் விதிப்படி, அரசு நிர்ணயித்த விலையில்தான் மதுபானங்களை விற்க வேண்டும், அதிக விலைக்கு விற்க தடை விதிக்க வேண்டும். விலைப் பட்டியல் ஒட்ட உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த  உயர் நீதிமன்றம், அரசு நிர்ணயித்த எம்ஆர்பி விலையில்தான் மதுபானங்கள் விற்கப்படுகின்றனவா, மதுபானங்கள் விற்கும்போது ரசீதுகள் கொடுக்கப்படுகின்றனவா, ஒவ்வொரு மதுபானக் கடையிலும் விலைப்பட்டியல் ஒட்டப்படுகிறதா, அதிக விலைக்கு விற்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது... என பல்வேறு கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு விளக்கம் அளிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு  உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர்,  சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளில் எந்த மீறல்களும் இல்லை.  உயர்த்தப்பட்ட மதுபான விலை விவரங்கள், அந்தந்த கடைகளில் முக்கியமான இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. அதிகவிலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதைத் தடுக்க, திடீர் சோதனைகள் நடத்தும்படி, மூத்த மண்டல மேலாளர், மாவட்ட மேலாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதைத் தடுக்க இவர்களும், பறக்கும்படையும் மாதம் ஒருமுறை சோதனைகள் நடத்தி வருகின்றனர்.  

அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யும் டாஸ்மாக் பணியாளர்களுக்கும், மேற்பார்வையாளர்களுக்கும், ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத் தொகை, அவர்களிடம் இருந்தே வசூலிக்கப்படுகிறது. மேலும், கடை ஊழியர்கள், மேற்பார்வையாளர்கள் பணிமாற்றம் செய்யப்படுகின்றனர். தொடர்ச்சியாக இக்குற்றத்தில் ஈடுபடுவோர் பணி இடைநீக்கம் செய்யப்படுகின்றனர்.  அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

2019 ஏப்ரல் முதல் 2020 மார்ச் வரையில் நடத்தப்பட்ட சோதனைகளில், அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்ததாக சென்னையில் 2,129 வழக்குகளும், கோவையில் 1,487 வழக்குகளும், மதுரையில் 2,422 வழக்குகளும், சேலத்தில் 1,365 வழக்குகளும், திருச்சியில் 1,916 வழக்குகளும் என மொத்தம் 9,319 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன.  இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் நிர்வாகம், தமிழகத்தில் உள்ள 18 மதுபான ஆலைகளிடம் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்கிறது.  இந்த ஆலைகள்,  உணவு தரம் மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிமம் பெற்றே நடத்தப்படுகின்றன. மதுபானங்கள் தரமாக இருக்கிறதா என ஆய்வு செய்ய, ஒவ்வொரு மதுபான ஆலைக்கும் கலால் வரித்துறை மேற்பார்வை அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த ஆலையின் அன்றாட நடவடிக்கைகளை அவர் கண்காணிப்பார். மேலும், மதுபானங்களின் தரம் குறித்து சுதந்திரமான அமைப்புக்களை கொண்டு பரிசோதித்து சான்றளிக்கப்பட்ட பிறகே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த வழக்கு,  நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, டாஸ்மாக் நிர்வாகத்தின் பதில்மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளனர். இந்த வழக்கில் மனுதாரர் சார்பாக வக்கீல் கே.செல்வராஜ் ஆஜராகி பதில் அளிக்க அவகாசம் கேட்டார். இதை நீதிபதிகள் ஏற்று, விசாரணையை 2 வாரத்துக்கு  ஒத்தி வைத்தனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

குடிப்பழக்கத்தை தட்டிக்கேட்ட பாட்டியை கொன்ற பேரன்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Grandson attack grandmother for drunkenness

குடிப்பழக்கத்தை கண்டித்த பாட்டியை பேரனே கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ளது சாரூர். இந்த பகுதியில் வசித்து வந்தவர் தாசம்மாள் (80). இவருடைய மகன் புஷ்பராஜ் என்பவருக்கு அஜித் மகன் இருக்கிறார். அவருக்கு வயது 23.

குடும்ப பிரச்சனை காரணமாக புஷ்பராஜின் மனைவியை பிரிந்து சென்று விட்டார். இதனால் புஷ்பராஜூம் அவருடைய மகன் அஜித்தும் தாசம்மாளுடன் வசித்து வந்தனர். அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் புஷ்பரஜ் இறந்து விட்டார் .

அதன் பிறகு பாட்டியுடன் அஜித் மட்டும் வசித்து வந்தார். அந்த பகுதியில் பெயிண்டிங் வேலைகளுக்கு சென்று வந்த அஜித் குடிப்பழக்கத்திற்கு நாளடைவில் அடிமையாகி விட்டார். இந்நிலையில் பாட்டி  தாசம்மாள் பெயரில் உள்ள 15 சென்ட் நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதி வைக்கும்படி அஜித் மது அருந்திவிட்டு ரகளை செய்து வந்துள்ளார்.

வழக்கம்போல் நேற்று இரவு 11 மணிக்கு மது குடித்துவிட்டு வந்த அஜித் பாட்டி தாசதாசம்மாளிடம் இது தொடர்பாக சண்டை போட்டுள்ளார். அப்பொழுது பாட்டி தட்டி கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த அஜித் தாசம்மாளை கீழே தள்ள, சுவரில் தலை மோதி சம்பவ இடத்திலேயே தாசம்மாள் உயிரிழந்தார். தான் தாக்கியதால் பாட்டி இறந்ததை அறிந்துகொண்ட அஜித் பயத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.