Skip to main content

"முதல்வர் இதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும்!" - வேல்முருகன் வலியுறுத்தல்!

Published on 03/02/2021 | Edited on 03/02/2021

 

Tamizhaga Vazhvurimai Katchi velmurugan pressmeet at neyveli


தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் நெய்வேலியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

 

அப்போது அவர் கூறியதாவது, "மத்திய பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் தமிழக இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை தட்டிப் பறித்து வருகிறது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி. இந்தியா, மண்ணின் மைந்தர்களைப் புறக்கணித்து வட இந்தியர்களை உயர் பதவியில் நியமனம் செய்துவருகிறது. குறிப்பாக 259 பொறியாளர் பணியிடங்களுக்காக அண்மையில் தேர்வு நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்வில் 1,585 பேர் தேர்வாகி உள்ளதாக என்.எல்.சி. இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 10 பேர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த தேர்வு எதன் அடிப்படையில் நடத்தப்பட்டது. இந்த தேர்வு நடத்துபவர்கள் யார்? இந்த தேர்வில் தமிழகத்தில் லட்சக்கணக்கான படித்த இளைஞர்கள் இருக்கும்போது தமிழர்கள் தேர்வு பெறாமல் போனது எப்படி? என்.எல்.சி. நிறுவனத்திற்கு வீடு நிலம் கொடுத்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்கள் 10,000 பேர் ஒப்பந்தத் தொழிலாளியாகவும், அப்ரண்டிஸ் பயிற்சி தொழிலாளர்களாகவும் பணியாற்றுகின்றனர். உயிரிழந்தவர்களின் வாரிசுகள் வேலைவாய்ப்பு கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு வேலை வழங்காமல் என்.எல்.சி நிறுவனம் தொடர்ச்சியாகப் புறக்கணித்து வருகிறது. 

 

இந்த தேர்வை உடனடியாக ரத்து செய்யவேண்டும். இந்த 259 பதவிகளுக்கு என்.எல்.சி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். தமிழகத்தில் தகுதியான தேர்வாளர்கள் கிடைக்கவில்லை என்றால் என்.எல்.சி. நிர்வாகம் வெளி மாநிலத்தில் இருந்து பணியாளர்களைத் தேர்வு செய்து கொள்ளலாம். என்.எல்.சி. நிர்வாகம் வீடு நிலங்களைக் கையகப்படுத்திய போது பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. தமிழக அரசு இவ்விஷயத்தில் கள்ள மவுனம் சாதிப்பது நியாயம் அல்ல. ஏனென்றால் தமிழக அரசின் வருவாய்த்துறை தான் வீடு நிலங்களைக் கையகப்படுத்தி என்.எல்.சி.க்கு வழங்கியுள்ளது.

 

எனவே தமிழக முதல்வர் இதனைத் தடுத்து நிறுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வரும் பிப்ரவரி 16-ஆம் தேதி என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு மாபெரும் தொடர் போராட்டம் நடத்தப்படும். தமிழக சட்டமன்றத்தில், முதல்வர் இதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொட்டாலே உதிர்ந்து விழும் கட்டிடம்; அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Recommendation to take action against the authorities as  building has been constructed in substandard manner

சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையிலான சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் வேலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை வேலூர் அரசு பழைய மருத்துவமனை, வேலூர் கோட்டையில் உள்ள அருங்காட்சியகம், அப்துல்லாபுரத்தில் உள்ள சிறிய டைட்டில் பூங்கா கட்டுமான பணி ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

அப்துல்லாபுரத்தில் கட்டப்பட்டு வரும் சிறிய டைட்டில் பூங்கா பணி கடந்த ஜனவரி மாதமே முடிக்கப்பட வேண்டிய நிலையில் ஒப்பந்ததாரர் முடிக்காததால் அவருக்கு 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு புதிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. அடுத்த எட்டு மாத காலங்களுக்குள் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் அரசு பல்கலைக்கழகத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 29 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட மகளிர் தங்கும் விடுதியை ஆய்வு மேற்கொண்ட போது கட்டிடம் முறையாக தரம் அற்று கட்டப்பட்டிருப்பதாகவும், ஒரு சில இடங்களில் தொடும்போதே சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து விழுந்தது.

Recommendation to take action against the authorities as  building has been constructed in substandard manner

மேலும் கட்டிடத்தின் பகுதிகள் மிகுந்த விரிசலுடன் காணப்படுவதால் அதிர்ச்சி அடைந்த உறுதிமொழி ஆய்வு குழு ஏழை எளிய மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் அரசு ஒதுக்கிய நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை என்றும், இது மன்னிக்க முடியாத தவறு. இந்த கட்டிடம் வரும் காலத்தில் பேரிடர் காலங்களில் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும், ஆகவே மாவட்ட ஆட்சியர், நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து இந்த கட்டிடத்தை முழுமையாக ஆய்வு செய்து இதன் தரம் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும். அறிகையின் முடிவில் தரமற்று கட்டப்பட்டது தெரியவந்தால் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுப்பதோடு அவரை பிளாக் லிஸ்டில் போட வேண்டும் என்றனர்.

மேலும் இக்கட்டிட கட்டுமான பணியை மேற்பார்வை செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு கூடுதல் கட்டிடம், கூடுதல் ஆய்வகங்கள் வேண்டும் என்பதால் அரசு முன்னுரிமை அடிப்படையில் உரிய நிதியை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைக்கிறது என்றும் கூறினார்.

Next Story

ரூ. 2000 கோடிக்கு என்.எல்.சி. நிறுவனப் பங்குகளை விற்க மத்திய அரசு ஆலோசனை!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Central government advises to sell shares of NLC company for Rs.2000 crore

இந்திய அரசு நிறுவனமான என்.எல்.சி நிறுவனத்தினுடைய 7 சதவீத பங்குகள் விற்பனைக்கு வர இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது தற்போது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

2013 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் இருந்தபோது, மத்திய அரசு இதேபோல் என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளைத் தனியாருக்கு விற்பதாக அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு அன்றைய ஆளும் கட்சியான அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடத்தின. பிறகு தனியாருக்கு விற்கப்படுவதாக இருந்த 5 சதவீத என்.எல்.சி பங்குகளையும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு வாங்குவதாக முடிவெடுத்தது. 

இந்த நிலையில், தற்போது மீண்டும் என்.எல்.சியின் 7 சதவீத பங்குகள் விற்பனைக்கு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. 2013ல் என்.எல்.சியின் ஒரு பங்கின் விலை ரூ.75 ஆக இருந்தது. தற்போது ஒரு பங்கின் விலை ரூ. 200க்கும் மேல் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதன்படி, 7 சதவீதம் பங்குகள் என்பது ரூ. 2000 கோடிக்கும் மேலாக வரும் எனச் சொல்லப்படுகிறது. 

தமிழ்நாடு அரசின் நிதி நிலை சூழ்நிலையில், 2000 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்க இயலுமா என்ற கேள்வி எழுவதாகச் சொல்லப்படுகிறது. என்.எல்.சி. இந்தியா லிமிடெட் அரசு நிறுவனத்திற்காகத் தமிழ்நாட்டில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. தற்போது வரை நிலம் கையகப்படுத்தியவர்களுக்கு உரிய நிவாரணமும், பணியும் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதனைக் கண்டித்து பாஜகவை தவிர ஏனைய கட்சிகள் அனைத்தும் போராடும் நிலையில், மத்திய பாஜக அரசு தற்போது என்.எல்.சி. பங்குகளை விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் மேலும் பிரச்சனையைத் தீவிரப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.