Skip to main content

'யார் இந்தியர்கள் என தமிழர்களுக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை' - கனிமொழி கண்டனம்!

Published on 19/10/2021 | Edited on 19/10/2021

 

'Tamils ​​not need learn a lesson from anyone' - Kanimozhi condemned!

 

ஸொமேட்டோ செயலியில் விகாஷ் என்ற நபர் உணவு ஆர்டர் செய்த நிலையில், அவர் ஆர்டர் செய்த உணவு அவருக்கு வழங்கப்படவில்லை. இதனால் ஸொமேட்டோவின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்ட அவர், இதுதொடர்பாக புகாரளித்ததுடன் பணத்தைத் திரும்ப அளிக்குமாறு கேட்டுள்ளார். 

 

இதுதொடர்பான உரையாடலின்போது, வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர், இந்தி நமது நாட்டின் தேசிய மொழி என்றும், எனவே அனைவரும் அதைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூகவலைதளங்களில் ஸொமேட்டோ நிறுவனம் கடுமையாக விமர்சிக்கப்பட்டதுடன், #RejectZomato என்ற ஹாஷ்டேக்க்கும், #HindiIsNotNationalLanguage என்ற ஹாஷ்டேக்கும் ட்ரெண்டாக தொடங்கியது. அதேபோல் #Hindi_Theriyathu_Poda என்ற ஹாஷ்டேக்கும் ட்ரெண்டானது. 

 

இந்நிலையில் சமூகவலைதளங்களில் எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து, தனது வாடிக்கையாளர் சேவை மைய ஊழியரின் செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது ஸொமேட்டோ. மேலும், இந்தியை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறிய அந்த ஊழியரையும் பணி நீக்கம் செய்துள்ளது. 

 

இதுதொடர்பாக  ஸொமேட்டோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; 

 

‘வணக்கம் தமிழ்நாடு! எங்கள் வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் தேசத்தின் மாறுபட்ட கலாச்சாரத்தின் மீதான எதிர்க்கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரைப் பணிநீக்கம் செய்துள்ளோம். பணிநீக்கம் என்பது சரியான நெறிமுறை என நம்புகிறோம். மேலும் மக்களின் உணர்வுகளுக்கு எதிராகக் கருத்தைப் பகிரக்கூடாது எனத் தெளிவாக நாங்கள் எங்கள் முகவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி அளிக்கிறோம்.

 

இந்த வாடிக்கையாளர் சேவை முகவரின் அறிக்கைகள், மொழி அல்லது சகிப்புத்தன்மை குறித்த நிறுவனத்தின் நிலைப்பாட்டைக் குறிக்கவில்லை. ஒரு நிறுவனமாக, நாங்கள் முழு பயன்பாட்டிற்காகத் தமிழ் செயலியை உருவாக்குகிறோம். நாங்கள் ஏற்கனவே மாநிலத்திற்கான தமிழில் சந்தைப்படுத்தல் முயற்சிகளை உள்ளூர் மயமாக்கியுள்ளோம் (எ.கா. நாங்கள் மாநிலத்திற்கான உள்ளூர் பிராண்ட் அம்பாசிடராக அனிருத்தை தேர்வு செய்துள்ளோம்). மேலும், கோயம்புத்தூரில் ஒரு உள்ளூர் தமிழர் கால் சென்ட்டர் / சர்வீஸ் சென்ட்டரை உருவாக்கும் பணியில் உள்ளோம்.

 

உணவு மற்றும் மொழி ஒவ்வொரு மாநிலத்தின், கலாச்சாரத்தின் இரண்டு அடித்தளங்கள் என்பதை நாங்கள் புரிந்துள்ளோம். அவை இரண்டையும் நாங்கள் முழுமையாக உணர்ந்துள்ளோம் என மீண்டும் தெரிவித்துக்கொள்கிறோம்.’ இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

மேலும் ஸொமேட்டோ தனது ட்விட்டர் பதிவில், தங்களது வாடிக்கையாளர் சேவை மைய முகவரின் நடத்தைக்கு மன்னிப்பு கேட்பதாகவும், தயவு செய்து ஸொமேட்டோவைப் புறக்கணிக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளது. 

 

'Tamils ​​not need learn a lesson from anyone' - Kanimozhi condemned!

 

இந்த சம்பவத்திற்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'வாடிக்கையாளர்களுக்கு இந்தி அல்லது ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழர்களுக்கு யாரும் யார் இந்தியர்கள் என்று பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட மொழிகளில் மட்டுமே சில நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை செயல்பட்டுவருகிறது. நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மாநில மொழியில் பேசுவதைக் கட்டாயமாக்க வேண்டும்' என 'இந்தி தெரியாது போடா' என்ற டேக் உடன் பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.