Skip to main content

ஒ.என்.ஜி.சி அதிகாரிகளை தனி ஆளாக மண்வெட்டியோடு விரட்டிய நெடுவாசல் விவசாயி உயிரிழந்தார்!!

Published on 22/11/2020 | Edited on 23/11/2020
 Neduvasal farmer who chased away ONGC officials

 

பொன் விளையும் டெல்டா பூமியில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்க மத்திய அரசின் ஒ.என்.ஜி.சி நிறுவனம் டெல்டா மாவட்டம் முழுவதும் விளைநிலங்களை கையகப்படுத்தி வந்த நிலையில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் விவசாயிகளை இணைத்து போராட்டங்களை நடத்தினார்.

அதேநேரத்தில் காவிரி கடைமடைப் பாசனப் பகுதியான நெடுவாசலில் சத்தமில்லாமல் பல விவசாயகளின் விளைநிலங்களை ஆய்வு செய்த அதிகாரிகள் விவசாயத்தில் சம்பாதிக்க முடியாத பணத்தை குத்தகைக்கு கொடுத்தால் சம்பாதிக்கலாம். உங்கள் நிலம் அப்படியே கிடக்கும் என்று ஆசை வார்த்தை கூறி ஒப்பந்தம் செய்து கொண்ட நிலையில், கடைசியாக சுப்பிரமணியன் என்ற விவசாயியிடம் சென்று அதே ஆசை வார்த்தைகளை சொல்ல, என் உயிரே போனாலும் என் விளை நிலத்தை எண்ணெய் எடுக்கவும், எரிவாயு எடுக்கவும் கொடுக்கமாட்டேன். மீறி யாராவது என் நிலத்தில் வைத்தால் என் உயிர் போனாலும் கவலைப்படமாட்டேன். வந்தவர்களில் ஒருவரையாவது தாக்குவேன் என்று கூறி மண்வெட்டியோடு தனி ஒரு ஆளாக அதிகாரிகளை விரட்டினார். 

பலமுறை முயன்றும் பலனளிக்காத அதிகாரிகள் விவசாயி சுப்பிரமணியனை திருவாரூர் ஆய்வுக்கூட்டத்திற்கு அழைத்து அங்கும் மிரட்டல் தொனியில் அதிகாரிகள் பேச, கோடி கோடியாக பணம் கொட்டிக் கொடுத்தாலும் என் நிலத்தை குத்தகைக்கு கொடுக்க மாட்டேன் என்று உறுதியாக சொல்லிவிட்டு ஊருக்கு வந்து கடைசி வரை விவசாயம் செய்தார். இந்த தனி நபர் போராட்டத்திற்கு பிறகே உலகமே திரும்பிப்பார்த்த நெடுவால் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டம் நடந்தது.

தன் மண்ணுக்காக இத்தனை உறுதியாக நின்று போராடிய விவசாயி சுப்பிரமணியன் இன்று ஞாயிற்றுக் கிழமை மாலை உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் நெடுவாசல் சுற்றியுள்ள விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.