Skip to main content

ட்ரெண்டாகும் ‘தமிழக வேலை தமிழருக்கே’

Published on 03/05/2019 | Edited on 04/05/2019

 

தமிழக வேலை தமிழருக்கே என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

மத்திய அரசின் துறைகளில் தமிழகத்தில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் உள்ள பணி காலியிடங்களுக்கு வெளிமாநிலத்தவர்கள் அதிக அளவில் பணியமர்த்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் தமிழ்நாட்டில் ரயில்வே துறை பழகுநர் இடங்களுக்காக 7000 பேரிடம் நேர்காணல் நடைபெற்றதாகவும், அதில் வெறும் 400 பேர் மட்டுமே தமிழர்கள் என்றும் மற்றவர்கள் வெளி மாநிலத்தவர் என்றும் கூறப்படுகிறது.

 

t

 

இது குறித்து கருத்து தெரிவித்த தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் மணியரசன், மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் தமிழர்களைப் புறக்கணித்து வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களையே மத்திய ஆட்சியாளர்கள் வேலையில் சேர்க்கின்றனர். இது பச்சையான இன ஒதுக்கல் கொள்கை என குற்றம் சாட்டினார். மேலும் இதனைக் கண்டித்து திருச்சி பொன்மலை பணிமனை முன் இன்று போராட்டம் நடைபெற்றது.

 

போராட்டத்தில் எதிரொலியாக சமூக வலைதளங்களில் #தமிழகவேலைதமிழருக்கே என்ற ஹேஸ்டேக் வேகமாக பரவி வருகிறது. அதேபோல் #TamilNaduJobsForTamils என்ற ஹேஸ்டேக்கும் ட்ரெண்டிங்கில் உள்ளது. பலரும் தங்களது கருத்துகளை இந்த ஹேஸ்டேக் மூலம் பதிவிட்டு வருகின்றனர். 

 

t


ஏன்? இந்த டிரெண்டிங்

பல்லாயிரம் ஆண்டுகளாக இம்மண்ணில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் அரசியல், வரலாறு, பண்பாடு, தாயகம் ஆகியவற்றை தமிழர்களுக்கே உறுதி செய்யும் வகையில்தான் பல போராட்டங்களுக்குப் பிறகு 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள், தமிழர்களுக்குரிய தாயகமாக “தமிழ்நாடு” அமைக்கப்பட்டது.

 

இன்று “தமிழ்நாடு” அமைக்கப்பட்ட நோக்கங்கள் சிதைக்கப்பட்டு, தமிழ்நாட்டின் தொழில் – வணிகம் – வேலை வாய்ப்பு அனைத்தும் பிற மாநிலத்தவரால் ஆக்கிரமிக்கப்பட்டு, தமிழர்கள் சொந்த தாயகத்திலேயேஏதிலியராகும் சூழல் எழுந்துள்ளது. இதிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள வேண்டியது முதன்மையான தேவை! அதற்கான ஒரு கூட்டு முயற்சியே இந்தப் பரப்புரை இயக்கம்!

 

எதற்கு?

தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் அனைத்திலும் 90% பணிகள் தமிழர்களுக்கே வழங்கப்பட வேண்டும்.

 

திருச்சி பொன்மலை தொடர்வண்டி பணிமனையில் பழகுநர்களாக 300 இந்திக்காரர்களை அமர்த்தியுள்ளதை நீக்கி, அவ்விடங்களைத் தகுதியுள்ள தமிழ்நாட்டு இளையோருக்கு வழங்க வேண்டும்.

 

தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்வைத்த “தமிழக வேலைகள் தமிழருக்கே” என்ற முழக்கம் இந்திய அளவில் பேசு பொருளாகியுள்ளது. இதையொட்டி, திருச்சி பொன்மலையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்திய போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

திருச்சி பொன்மலையிலுள்ள தொடர்வண்டித்துறைப் பணிமனையில் புதிதாக எடுத்துள்ள 300 பணியாளர்கள் அனைவருமே இந்திக்காரர்கள். தமிழ்நாட்டிலேயே தமிழினத்தை ஒதுக்கி வைக்கும் இந்திய அரசின் இன ஒதுக்கலைக் கண்டித்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் இன்று (மே 3) திருச்சி பொன்மலை பணிமனை முன்பு தமிழர் மறியல் போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

போராட்டத்திற்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறியாளர் தோழர் க. அருணபாரதி தலைமை தாங்கினார். இப்போராட்டத்தில், பல்வேறு கட்சி – இயக்கங்களைச் சேர்ந்தோர் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

 

பொன்மலை இரயில்வே பணிமனையில் பணியமர்த்தப்பட்டுள்ள 300 இந்திக்காரர்களை வெளியேற்ற வேண்டும், தமிழர்களுக்கே 90% வேலை வழங்க வேண்டும் என்று கோரி ஆவேச முழக்கங்களுடன் பணிமனையின் முதன்மை நுழைவு வாயிலை நோக்கிப் பேரணியாக திரண்டு சென்ற தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களை பணிமனையின் வாயிலில் (ஆர்மரி கேட்) காவல் துறையினர் மறித்து தடுத்து நிறுத்தினார். அங்கு ஆவேச முழக்கங்களை எழுப்பிய தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் கொளுத்தும் வெயிலென்றும் பாராமல் சாலையில் படுத்தனர்.

 

“வெளியேற்று வெளியேற்று, வெளியாரை வெளியேற்று”, “இந்திக்காரர்களை வெளியேற்று”, “வந்தவனெல்லாம் சுரண்டிக் கொழுக்க தமிழ்நாடு என்ன திறந்த வீடா?”, “மண்ணின் மைந்தர்களுக்கே வேலைவாய்ப்பு அளிக்க தமிழ்நாடு அரசே சட்டம் இயற்று” என்பன உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆவேசமுடன் எழுப்பினர்.

 

இதனையடுத்து, காவல்துறையினர் அனைவரையும் கைது செய்வதாக அறிவித்து, தாங்கள் கொண்டு வந்த வாகனங்களில் அனைவரையும் கைது செய்து ஏற்றினர். படித்த இளைஞர்கள் – ஆண்களும் பெண்களுமாக, தங்கள் கைக்குழந்தைகளுடன் பிள்ளைகளுடன் கைது செய்யப்பட்டு வாகனங்களில் ஏற்றப்பட்டனர்.

 

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ. மணியரசன், பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் ஐயா ஐயனாபுரம் சி. முருகேசன், திருவாரூர் மாவட்டத் தலைவர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொள்கை பரப்புச் செயலாளர் தோழர் பெரியார் சரவணன், நாம் தமிழர் கட்சி தஞ்சை பொறுப்பாளர் திரு. கிருஷ்ணகுமார், தமிழக விவசாயிகள் சங்கத் திருச்சி மாவட்டத் தலைவர் திரு. ம.பா. சின்னதுரை, தமிழர் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் செயப்பிரகாசு நாராயணன், மகளிர் ஆயம் தலைவர் தோழர் ம. இலட்சுமி அம்மாள், தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.

 

இப்போராட்டத்திற்கு ஆதரவாக ட்விட்டர் - முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் “தமிழக வேலை தமிழருக்கே” என்ற முழக்கத்தோடு தமிழ்த்தேசியப் பேரியக்கமும், தமிழின உணர்வாளர்களும் முன்னெடுத்தப் பரப்புரை இயக்கம் இந்திய அளவில் விவாதங்களை எழுப்பியுள்ளதோடு, முதல்நிலை பெற்றது.

 

மராட்டிய மாநிலத்தினர் சிலர், நமது போராட்டத்தை ஆதரித்தும் மராட்டிய மாநிலப் பணிகள் மராட்டியர்களுக்கே என்றும் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக்கினர்.

 

நாம் தமிழர் கட்சித் தலைவர்  செந்தமிழன் சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்  தி. வேல்முருகன், சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி  து. அரிபரந்தாமன், பச்சைத் தமிழகம் கட்சித் தலைவர் முனைவர் சுப. உதயகுமார், தமிழ்த்தேச மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் தமிழ்நேயன் உள்ளிட்ட பல்வேறு கட்சி – இயக்கத் தலைவர்கள், இக்கோரிக்கைக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்துத் தெரிவித்தனர்.

 

t

 

சமூக வலைத்தளங்களில் உள்ள தமிழ் மக்கள் பலரும் அவரவர் இல்லங்களில் இருந்துகொண்டே தமிழக வேலை தமிழருக்கே என்ற தலைப்பிலே முழக்கங்களை எழுப்பி, இந்திய அரசையும் தென்னகத் தொடர்வண்டி துறை, திருச்சி தொடர்வண்டி கோட்ட மேலாளர் உள்ளிட்ட பலரையும் தங்கள் ட்விட்டர் பதிவுகள் வாயிலாக கேள்வி கேட்டு - தமிழர்களை ஏன் ஒதுக்குகிறீர்கள் என்று பதிவிட்டு வருகின்றனர். பலர் வெளி மாநிலத்தவரால் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை பதிவிட்டு வருகின்றனர். ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் நமது முழக்கம் பேசு பொருளாகியுள்ளது!

 

காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தோழர்கள், தற்போது அடைத்து வைக்கப்பட்டுள்ள மண்டபத்திலிருந்து கொண்டே, இச்சமூக வலைத்தளப் பரப்புரையில் பங்கெடுத்து வருகின்றனர்.

 

18 பொதுபணித்துறைகளில் 90 சதவீத இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையோடு இன்று நடைபெற்ற போராட்டத்தில் பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு திருச்சி தஞ்சை, புதுக்கோட்டை, ஆகிய பகுதியில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இவர்களோடு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பெண்கள், குழந்தைகள், தொழிலாளர்கள் என 400-க்கும் மேற்பட்டோர் பொன்மலை ரெயில்வே பணிமனை முன்பு குவிந்தனர்.

 

பின்னர் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழக இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று கோரி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 400 பேரையும் கைது செய்தனர்.
 

சார்ந்த செய்திகள்