Skip to main content

போலீஸை பதைபதைக்க வைத்த மாணவர் காங்கிரஸ்! சென்னையில் பரபரப்பு!

Published on 21/02/2023 | Edited on 21/02/2023

 

மும்பை ஐ.ஐ.டி.யில் மர்ம மரணமடைந்த தலித் மாணவர் தர்ஷன் சோலங்கிக்கு நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று ஊர்வலம் நடத்தினர். இதில் பெருந்திரளான மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், பா.ஜ.க.வின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி. அமைப்பினர் அம்மாணவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்கு அரங்க மேடையில் வைக்கப்பட்டிருந்த பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் உள்ளிட்டோரின் படங்களையும் ஏ.பி.வி.பி. அமைப்பினர் சேதப்படுத்தினர். இந்தத் தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாசர் உள்ளிட்ட பல மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

 

இந்தத் தாக்குதலைக் கண்டித்து தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சார்பாக இன்று (21.02.2023) மாலை 4.00 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம் ஹடோஸ் சாலையில் உள்ள சாஸ்திரி பவன் அலுவலகத்திற்கு எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மாணவர் காங்கிரஸினர் கையில் ஒரு மர்ம பொருளைக் கொண்டுவந்தனர். அதனைக் காவல்துறை கண்டறிந்து அவர்களிடமிருந்து அதனைக் கைப்பற்ற முயன்றனர். ஆனால், மாணவர் காங்கிரஸினர் அதனை விடாமல் பிடித்திருந்தனர். போலீஸாரும் மாணவர் காங்கிரஸினரும் மாறி மாறி அதனை இழுத்தபோது, அங்கு ஏதோ பெரிய பரபரப்பு ஏற்படப் போகிறது எனச் சுற்றிருந்தவர்கள் பதைபதைப்பில் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த சம்பவம் ஏறத்தாழ 10 நிமிடங்களாக நடந்து கொண்டிருந்தது. 

 

ஒரு கட்டத்தில் அங்கு வந்த காவல்துறை உயரதிகாரி, “அதை விடுங்க. அவங்க என்ன பண்றாங்கன்னு பார்ப்போம்” என்று காவல்துறையினரை நிறுத்தினார். அதனைத் தொடர்ந்து தங்கள் கையில் வைத்திருந்த பொருளை மாணவர் காங்கிரஸினர் வெளியில் எடுத்தபோது, ஒரு காக்கி நிற அரை டவுசர் இருந்தது. ஏதோ பெரிய மர்மம் என நினைத்திருந்த காவல்துறையினர் அதனைக் கண்டு அப்சட் ஆகி “என்ன இது” என்று கேட்க, மாணவர் காங்கிரஸினர், “மோடி டவுசர்.. மோடி டவுசர்..” என்று கோஷமிட்டனர். பிறகு அதனைத் தீயிட்டுக் கொளுத்த முயன்றபோது காவல்துறையினர் சுதாரித்து அவர்களைத் தடுத்து, அந்தத் துணியைக் கைப்பற்றினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு அங்கிருந்தவர்களை காவல்துறையினர் கைது செய்து பேருந்தில் அழைத்துச் சென்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்