Skip to main content

அனுமதியில்லாமல் எப்படி வேல் யாத்திரை நடத்த முடியும்? -உயர்நீதிமன்றம் கேள்வி!

Published on 11/11/2020 | Edited on 11/11/2020

 

 

tamilnadu bjp vel yathirai chennai high court

 

 

அனுமதி அளிக்காத நிலையில்  எப்படி வேல் யாத்திரை நடத்த முடியும்? என பா.ஜ.க.வுக்கு கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், கரோனா விதிகளை பாரபட்சமில்லாமல் அனைத்து கட்சி, மத நிகழ்ச்சிகளுக்கும் அமல்படுத்த வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

 

பா.ஜ.க.வின் வேல் யாத்திரையைத் தடுக்கக்கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, தமிழக பா.ஜ.க. பொதுச்செயலாளர் நாகராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், யாத்திரையில் எத்தனை பேர் பங்கேற்பர்? எத்தனை வாகனங்கள் கலந்து கொள்ளும் என்பன உள்ளிட்ட விவரங்களுடன் காவல் துறைக்கு விண்ணப்பம் அளிக்க,  பா.ஜ.க. தரப்புக்கு அறிவுறுத்தியது.

 

இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர், டி.ஜி.பி. தரப்பில் அறிக்கை தாக்கல் செய்து வாதிட்டார்.

 

அப்போது அவர், ‘கடந்த 6, 8 மற்றும் 9- ஆம் தேதிகளில், பா.ஜ.க.வினர் திருத்தணி, திருவொற்றியூர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய பகுதிகளில் யாத்திரை மேற்கொண்டனர். அதில் கலந்து கொண்டவர்கள் தனி மனித விலகலைப் பின்பற்றவில்லை. முகக் கவசமும் அணியவில்லை.  பா.ஜ.க. தலைவர் முருகன்,  முறையாக முகக் கவசம் அணியவில்லை.’ என டி.ஜி.பி. அறிக்கையை மேற்கோள்காட்டி வாதிட்டார்.

 

மேலும் அவர், ‘வேல் யாத்திரை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். இந்த யாத்திரையில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கோவில் யாத்திரை அல்ல, முழுக்க முழுக்க அரசியல் யாத்திரை. மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பா.ஜ.க. பொறுப்புடன் செயல்படாமல், சட்டத்தின் ஆட்சியைப் பின்பற்றாமல் செயல்பட்டுள்ளது.10 வாகனங்களில் 30 பேர் மட்டுமே செல்வதாகக் கூறிவிட்டு, அதை மீறியுள்ளனர்’ எனச் சுட்டிக்காட்டினார்.

 

பா.ஜ.க. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 38 கோவில்களில் 30 பேருடன் 18  வாகனங்களில் சென்று வழிபாடு நடத்த அனுமதியளிக்கக் கோரி, கடந்த 9- ஆம் தேதி விண்ணப்பித்ததாகக் குறிப்பிட்டார்.

 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘அனுமதி அளிக்காத நிலையில்  எப்படி யாத்திரை செல்ல முடியும்? கடந்த மூன்று நாட்களாக கட்சி தலைவர்கள் கூடியுள்ளனர்.  கட்சி தலைவர் பெரிய வேல் ஒன்றை ஏந்திச் செல்கிறார். இது ஆயுத சட்டப்படி குற்றம்’ எனச் சுட்டிக்காட்டினர்.

 

இதற்கு பதிலளித்த பா.ஜ.க. தரப்பு வழக்கறிஞர், ‘அது மரத்தால் செய்யப்பட்ட வேல். யாத்திரைக்கு அனுமதிகோரிய தங்களின் விண்ணப்பத்தைப் பரிசீலித்து, அமைதியாகச்  செல்ல அனுமதிக்க வேண்டும்.’ எனக் கேட்டுக் கொண்டார். உடனே நீதிபதிகள், தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு, அனைவருக்கும் பொதுவாகவே, கரோனா விதிகளை அமல்படுத்த வேண்டும் எனத் தமிழக அரசுக்கு அறிவுறுத்தினார்.

 

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், பா.ஜ.க.வினர் அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்த டி.ஜி.பி., சம்பந்தப்பட்ட மாவட்ட எஸ்.பி.க்களையும், காவல் ஆணையர்களையும் அணுக அறிவுறுத்தியுள்ளதாகவும், அதனடிப்படையில், ஓசூரில் யாத்திரைக்கு அனுமதி கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

 

இதை ஏற்ற நீதிபதிகள், யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர பா.ஜ.க.வுக்கு அனுமதியளித்ததுடன், வேல் யாத்திரையைத் தடுக்க கூடாது என்ற இடைக்கால கோரிக்கை மனுவை முடித்து வைத்தனர்.

 

மேலும், கரோனா விதிகளைக் கண்டிப்புடன், அனைத்து கட்சி கூட்டங்கள் மற்றும் மதக் கூட்டங்களுக்கும் பாரபட்சமில்லாமல் அமல்படுத்த, அதிகாரிகளுக்கு அறிவுறுத்த, அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், நவம்பர் 16- ஆம் தேதி வரை, மத நிகழ்ச்சிகளுக்குத் தடை விதித்து பிறப்பித்த அரசாணையை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 2- ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனை தொடர்பான வழக்கு; பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court ordered the school education department for Case related to punishment in schools

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பான மனு இன்று (25-04-24) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘பள்ளி குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனையைத் தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த வேண்டும். ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். 

விதிகளை மீறி குழந்தைகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால், அதன்பேரில் அதிகாரிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விதிகளை அமல்படுத்துவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்” என்று கூறி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது. 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.