Skip to main content

"80 வயதானவர்கள் தபாலில் வாக்களிக்கலாம்"!- தலைமை தேர்தல் ஆணைய செயலாளர் பேட்டி...

Published on 22/12/2020 | Edited on 22/12/2020

 

tamilnadu assembly election 2021 election commission officers press meet

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகளுடன் சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இரண்டாவது நாளாக ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் செயலாளர் உமேஷ் சின்ஹா, "மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்தோம். கரோனா தொற்று பரவாத வகையில் தேர்தல் நடத்துவதே தேர்தல் ஆணையத்தின் நோக்கம். கரோனா வழிகாட்டுதல்களுடன் சிறப்பான முறையில் பீகார் சட்டமன்றத் தேர்தல், இடைத்தேர்தல்களை நடத்தியுள்ளோம். ஊரகப் பகுதி உட்பட அனைத்து பகுதிகளிலும் அனைவரையும் வாக்களிக்கச் செய்வதே இலக்கு. 

 

tamilnadu assembly election 2021 election commission officers press meet

 

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. வாக்குச்சாவடி முகாம்களில் கரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படும். தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக சாய்வு தளங்கள் மருத்துவ வசதிகள், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு வசதி செய்து தரப்படும். விருப்பப்படும் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

tamilnadu assembly election 2021 election commission officers press meet

 

அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று மரபுப்படி தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும். பணப்பட்டுவாடா, பரிசுப்பொருள் விநியோகம் போன்ற விதிமீறல்களை தேர்தல் ஆணையம் கண்காணிக்கும். பெரும்பாலான கட்சிகள் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்த கோரிக்கை விடுத்துள்ளன. அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் செலவினம் தீவிரமாகக் கண்காணிக்கப்படும். வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பவர்களைக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

e12

மூன்று ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றுபவர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுமா என்பது பற்றி தற்போது எதுவும் கூற முடியாது. 1,000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி வீதம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். நடப்பு சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24- ஆம் தேதியுடன் முடிவடைகிறது. காலியாக உள்ள கன்னியாகுமரி மக்களவை தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

 

இதனிடையே, விவிபேட் இயந்திரம் தொடர்பான கையேடு, வாக்காளர் விழிப்புணர்வு குறும்படத்தை தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.