Skip to main content

21 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

Published on 05/12/2020 | Edited on 05/12/2020

 

tamilnadu assemble speaker dmk mlas chennai high court

 

 

சட்டப் பேரவைக்குள்  குட்கா பொருட்களைக் கொண்டு சென்றதாக, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

 

கடந்த 2017- ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்ததாக, பேரவை உரிமைக்குழு அனுப்பிய முதல் நோட்டீஸை எதிர்த்து, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நோட்டீஸில் அடிப்படைத் தவறுகள் உள்ளதாகக் கூறி, அதை ரத்து செய்தது. எனினும், தவறுகளை களைந்து புதிய நோட்டீஸ் அனுப்பலாம் எனவும் தெரிவித்திருந்தது.

 

இதையடுத்து, உரிமைக்குழு கூடி மீண்டும் அனுப்பிய இரண்டாவது நோட்டீஸை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 தி.மு.க. எம்.எல்.ஏ-க்களும், தி.மு.க.விலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட கு.க.செல்வமும் வழக்கு தொடர்ந்தனர். 

 

அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நோட்டீஸுக்கு இடைக்காலத்தடை விதித்த நிலையில், இடைக்காலத்தடையை நீக்கக்கோரி சட்டப்பேரவை செயலாளர் மற்றும் உரிமைக்குழு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட  மனுக்களின் இறுதி விசாரணை, நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா முன்பு நடைபெற்றது.

 

கடந்த 2- ஆம் தேதி, சட்டப்பேரவை செயலாளர் சார்பில், அரசின் மூத்த வழக்கறிஞர் சோமையாஜி ஆஜராகி வாதிட்ட நிலையில், இன்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், உரிமைக்குழு சார்பில் ஆஜராகி வாதாடியபோது, "உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவுப்படி, ஏற்கனவே வழங்கப்பட்ட நோட்டீஸில் இருந்த தவறுகள் திருத்தப்பட்டு, உரிமைக்குழு புதிய நோட்டீஸை வழங்கியுள்ளது. உரிமைக்குழு அனுப்பிய முதல் நோட்டீஸில், ‘தடை செய்யப்பட்ட குட்கா பொருளைக் கொண்டு வந்து காட்சிப்படுத்தியதற்கு’ எனச் சுட்டிக்காட்டப்பட்டது. தற்போது அனுப்பப்பட்டுள்ள இரண்டாவது நோட்டீஸில் சபாநாயகரின் அனுமதியின்றி குட்கா பொருளைக் காண்பித்ததற்காக’எனத் திருத்தப்பட்டுள்ளது. அவை செயல்படுவதற்கு குந்தகம் ஏற்படுத்தியதால், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களின் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்த சபாநாயகர், உரிமைக்குழு விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். அதன் பேரிலேயே, தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

 

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "எந்தெந்த பொருட்களைக் கொண்டு வருவதற்கு முன் அனுமதி பெற வேண்டுமென ஏதேனும் வழிமுறை உள்ளதா?’ எனக் கேள்வி எழுப்பிய நிலையில், அரசுத் தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ‘எது உரிமை, எது உரிமை மீறல் என்பது, ஏதும் பாராளுமன்றத்தாலோ, சட்டமன்றத்தாலோ வரையறை செய்யப்படவில்லை. மரபு மற்றும் பாரம்பரிய நடைமுறைகளின் அடிப்படையில் அவை முடிவு செய்யப்படுகிறது. ஒரு வழக்கறிஞர், நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது புகை பிடிக்கக்கூடாது என எந்த விதியும் இல்லாதபோதும், அது நீதிமன்றத்தில் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை ஒழுக்கம் என்பதைப் போல்தான், சட்டமன்ற  நடவடிக்கையும். பேச்சுரிமை என்ற போர்வையில், தடை செய்யப்பட்ட பொருளை ஊக்குவிக்கும் வகையிலான செயலை, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேற்கொண்டுள்ளனர். இது சட்டப்பேரவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகும். சபாநாயகர் உரிமைக்குழுவுக்கு பரிந்துரைத்துள்ள நிலையில், உரிமைக்குழு அதன் முடிவை பேரவையில் தாக்கல் செய்யும். அதன் பின்னர், பேரவைதான் இதில் இறுதி முடிவெடுக்கும். பேரவையின் இறுதி முடிவை எதிர்த்து,  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வழக்கு தொடரும் பட்சத்தில், அப்போதுதான் இதில் நீதிமன்றம் தலையிட முடியும். தற்போது இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முகாந்திரம் இல்லை" என வாதிட்டார்.

 

தொடர்ந்து, அரசுத் தரப்பின் வாதத்திற்கு விளக்கமளித்த தி.மு.க. தரப்பு வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், என்.ஆர் இளங்கோ, அமித் ஆனந்த் திவாரி மற்றும் கு.க செல்வம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர்,‘உரிமைக்குழு அனுப்பிய முதல் நோட்டீஸை தலைமை நீதிபதி அமர்வு ரத்து செய்தபோது, இந்த விவகாரம் நடந்து (2017) மூன்றாண்டுகள் ஆகி விட்டதால், அதனை அடிப்படையாக வைத்து தற்போது தண்டிக்க முடியாது எனத் தெரிவித்தது. தற்போதைய நிலையிலும், தலைமை நீதிபதி அமர்வின் உத்தரவைப் பொருத்திப் பார்க்க வேண்டும். உரிய காரணங்கள் ஏதுமின்றி சபாநாயகர் பரிந்துரைத்தார் என்ற காரணத்திற்காக மட்டுமே, உரிமைக்குழு இந்த விவகாரத்தில் தங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

உரிமைக்குழு அனுப்பிய முதல் நோட்டீஸில், தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வந்ததாகச் சுட்டிக்காட்டப்பட்டு, அது உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது சபாநாயகர் அனுமதி இல்லாமல் கொண்டு வந்தார்கள் எனப் பெயருக்கு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. உரிமைக்குழுத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், தி.மு.க தலைவர் ஸ்டாலின் மீது உயர்நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடுத்துள்ளதாலும், ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. சார்பில் வழக்கு தொடர்ந்துள்ளதாலும், காழ்ப்புணர்ச்சி வெளிப்படக்கூடும் என்பதால், உரிமைக் குழுவில் இருந்து தாங்களாகவே ஒ.பி.எஸ் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் விலகிக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் சபாநாயகர் புதிய குழுவை அமைத்துக் கொள்ளட்டும்.’எனத் தெரிவித்தனர். 

 

தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.  

Next Story

“ஓ.பி.எஸ். இரட்டை இலையைப் பயன்படுத்தத் தடை தொடரும்” - உயர்நீதிமன்றம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
ban on using OPS aiadmk symbol will continue says Madras High Court

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், ‘எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்’ என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு பல கட்ட விசாரணைக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் கடந்த 18 ஆம் தேதி, “அ.தி.மு.க. இரட்டை இலை சின்னம், கொடி ஆகியவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதிக்கப்படுகிறது” என அதிரடி தீர்ப்பை வழங்கி இருந்தார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் அந்த மனுவில், ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதா இல்லையா என்ற வழக்கு நிலுவையில் உள்ளதால்,  அந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை தனக்கு கட்சியின் இரட்டை இலை, சின்னத்தையும் கொடியையும் பயன்படுத்த அனுமதியளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது, “அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பி.எஸ்க்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது; ஓ.பி.எஸ். இரட்டை இலை, கட்சியின் பெயர் ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த மேல்மூறையீடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டதோடு, இது தொடர்பாக ஓ.பி.எஸ் தேர்தல் ஆணையத்தை அணுகத் தடையில்லை என்றும் கூறியுள்ளது. இந்த வழக்கின் இறுதி விசாரணை ஜூன் 10 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.