
அண்மையில் செய்தியாளர் சந்திப்பில், தி.மு.க.எம்.பி ஆ.ராசா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி விமர்சித்திருந்தார். அதேபோல் யார் ஊழல் கட்சி என விவாதிக்கத்தயாரா என முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விட்டிருந்தார் ஆ.ராசா.
இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதி, இன்று சென்னை அண்ணாநகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசுகையில், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நீதிமன்றத்தால் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கிறார் எனச் சொல்லியுள்ளார்கள். இன்னும் சொல்லப்போனால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைக் குற்றுயிரும் குலையுயிருமாகச் செய்த ஒரு முதல்வர் என்று சுப்ரீம்கோர்ட்டே சொல்லியிருக்கிறது என்பது அவர்களுடைய கருத்து. மேலும், தி.மு.க மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்வதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், அ.தி.மு.கவிற்கு எந்த அருகதையும் இல்லை எனச் சொல்லியிருக்கிறார்கள். சொடக்குப் போட்டுச்சொல்கிறார், கொள்ளைக்காரி எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது எனவும் சொல்லியிருக்கிறார்.
இதைப்பற்றி விவாதிப்பதற்கு உங்களுடைய அட்டர்னி ஜெனரலை கூடக் கூட்டி வாருங்கள் எனக் கூறுகிறார். மத்திய அமைச்சராக இருந்தஅவருக்கு, மாநில அரசுக்கு அட்டர்னி ஜெனரல் இல்லை என்பது கூடத் தெரியவில்லை. அட்வகேட் ஜெனரல் மட்டுமே மாநில அரசுக்கான தலைமை வழக்கறிஞர். மேலும், ஒரு தனிப்பட்ட நபருடைய வாழ்க்கையில், அட்வகேட் ஜெனரல் பதிலளிக்க வேண்டும் என அவசியமில்லை.ஆனால், இதுகூடத் தெரியாமல் ஆ.ராசா சொடக்குப் போட்டுச் சவால் விட்டிருக்கிறார். நான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 12 வழக்குகளில் 11 வழக்குகளில் ஆஜராகி 11 வழக்குகளில் வெற்றியடைந்தவன்.
12-ஆவது வழக்கும் வெற்றியை நோக்கி போய்க் கொண்டிருக்கும் போது, அவரின் உடன்பிறவா சகோதரியாக இருந்தவரின் சதிச் செயலால் வெளியேற்றப்பட்டேன். வெளியேற்றப்பட்டதன் காரணமே, அந்த வழக்கை குட்டிச்சுவர் ஆக்கவேண்டும், அந்த அம்மாவிற்குக் கெட்டப் பெயர் வாங்கித்தர வேண்டும் என்பதுதான். இது நடக்கக்கூடாது என அவர்கள் நினைத்ததாகச் சந்தேகப்படுகிறேன். ஏன்னெனில், நன்றாக சென்றுகொண்டிருந்த வழக்கை கெடுப்பது போல,என்னை அனுப்பவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நான் வெளியே வந்தேன். அதன்பிறகு நான் அமைதியாக, வாழ்க்கையைப் பார்த்துவந்தேன். கீழமை நீதிமன்றத்தில், வழக்கில் தண்டனை கிடைத்தது. அதற்குமேல் அப்பீல் செய்து பெங்களூரு கோர்ட்டில் விடுதலையானார்கள். அந்த விடுதலையை எதிர்த்து, பல்வேறு வற்புறுத்தல்களின் பெயரில் அப்பொழுது இருந்தகாங்கிரஸ்அரசின் துணையோடு, தி.மு.க சூழ்ச்சி செய்துஅப்பீல் செய்தார்கள்.அப்பீல் செய்த காலகட்டத்தில் ஜெயலலிதா இறந்துவிட்டார்கள்.
தெளிவாகச் சொல்லவேண்டும் என்றால் சில தேதிகளைச்சொல்லவேண்டும். ஜெயலலிதாமுன்னாள் முதலமைச்சராக இருக்கும்போது, இறக்கிறார்கள். அவர், இறந்த தேதி 05.12.2016. தீர்ப்பு வழங்கிய தேதி 14.02.2017. இறந்து சுமார் 80 நாட்கள் கழித்துத் தீர்ப்பு வருகிறது. இந்தச் சூழ்நிலையில்தான், அந்த ஜட்ஜ்மெண்ட் வந்தது.இந்தப் புத்தகத்தை யாராவது ராஜாவிடம் கொண்டுபோய்க் கொடுங்கள். நான் கொடுத்ததாகக் கொடுங்கள்.படித்துப் பார்த்துவிட்டு, எந்த இடத்தில் உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவைகொள்ளைக்காரி, அரசியலமைப்புச் சட்டத்தைக் கொலை செய்தவர், அதை மீறியவர்,அக்கிரமம் செய்தவர் என, எங்கேயாவது எழுதி இருக்கிறதா என்று கேளுங்கள். இதுதான், அந்தத் தீர்ப்பு வந்த புத்தகம். நான் தரத் தயாராக இருக்கிறேன். எடுத்து அவரிடம் கொண்டுபோய்க் காட்டுங்கள். அவரும் தன்னை வக்கீல் என்று சொல்கிறார். அதனால் அவர் படித்துப் பார்த்துத் தெரிந்துகொள்ளட்டும்.

உனக்கு என்ன அக்கறை எனக் கேட்கலாம், அதற்கு நான் பதில் சொல்கிறேன். நான் நடத்திவிட்டு வெளியில் வந்த வழக்கு, அந்த வழக்கினுடைய தன்மை என்ன என்று எனக்குத் தெரியும். அந்த வழக்கில் நான் விருப்பப்பட்டு வெளியே வரவில்லை. வெளியேற்றப்பட்டு, நான் வெளியே வந்தேன்.

அந்த வழக்கில் அவர் இறந்த பிறகு சட்ட நிலைமை என்ன? தயவுசெய்து நீங்கள் எல்லாம் புரிந்து கொள்ள வேண்டும். இதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அவர்வழக்கில் விடுதலையாகி இருக்கிறார் அதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். எப்படி விடுதலை ஆனார்கள் என்ற வியாக்கியானம் எல்லாம் பிறகு. அவர், விடுதலை செய்யப்பட்டார். அதுதான் உண்மை. ராஜா கூட விடுதலையாக இருக்கிறார். அந்த மாதிரி உயர்நீதிமன்றத்தால் விடுதலை ஆக்கப்பட்டு இருக்கிறார். ஆனால் விடுதலையாகி அப்பீல் தீர்ப்பு வருவதற்கு முன்னால், அவர் இறந்துவிட்டார். அந்தச் சந்தர்ப்பத்தில் சட்ட நிலைமை என்ன? அதுதான் முக்கியம்.
இறந்து போன மனிதரின்மீது, வழக்குத் தொடர்ந்து நடைபெறலாமா,கூடாதா என்பது ஒரு கேள்வி. இறந்துபோன மனிதரின்மீது, வழக்கு நடக்கக் கூடாது என்பதுதான் சட்ட நிலைமை.இறந்துபோன நபர், அதுவும் எந்தச் சூழ்நிலையில் இறக்கிறார். விடுதலை ஆகிவிட்டார் என்ற சூழ்நிலையில் இறக்கிறார். தீர்ப்பு 80 நாட்களுக்குப் பிறகு வருகிறது. இந்தச் சூழ்நிலையில் சட்ட நிலைமை என்ன? தயவுசெய்து சட்ட நிலைமையை ராஜாவிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
தேவைப்பட்டால் சொடக்குப் போட்டுச் சொன்னாரே..நான் வருகிறேன் அண்ணா அறிவாலயத்திற்கு, அவரிடம் விவாதிப்பதற்கு. யாருடைய பாதுகாப்பும் இல்லாமல், தனிப்பட்ட முறையில் நான் வருகிறேன். எனக்கு ஒரு பயமும் இல்லை. செக்சன் 394 குற்ற நடவடிக்கைகள், நடைமுறைச் சட்டம் 394 உட்பிரிவு 2. இதில் விடுதலையான பிறகு, மேலும் எவர் ஒருவர் அப்பீல் செய்து இருக்கிறாரோ, அவர் மீது தீர்ப்புச் சொல்லக்கூடாது. அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பது தான் சட்டம். இது குறித்து கேள்விகளை பின்னர் கேட்கலாம்.

394 (2 சி.ஆர்.பி.சி)இதன்படி இறந்து போனவர்கள் மீது எவ்விதமான குற்றச்சாட்டுகளும் நீர்த்துப் போகிறது. அதுவும் குறிப்பாகத் தண்டனை பெற்று அவர் போகவில்லை விடுதலையாகிதான் போயிருக்கிறார். அந்தச் சூழ்நிலையில் அவரது விடுதலையை ஊர்ஜிதப்படுத்த வேண்டும் என்பதுதான் சட்ட நிலைமை. இப்படியிருக்கும் பொழுது உச்சநீதிமன்றம் எவ்வாறு அரசியலமைப்புச் சட்டத்தைக் கொலை செய்த கொலைகாரி என்று சொல்லமுடியும். சுப்ரீம் கோர்ட்டுக்குச் சட்டம் தெரியாதா?இவருக்குத்தான் தெரியுமா?சுப்ரீம்கோர்ட் அவரை கொள்ளைக்காரி என்று சொல்லவில்லை. காரணம் 394 பற்றி அவர்களுக்குத் தெரியும். இதுதான் உண்மை. இன்னும் சொல்லப்போனால், இந்த வழக்கை நடத்திய சசிகலா குரூப் என்ன செய்து இருக்க வேண்டும் என்றால், அந்த அம்மா இறந்தவுடனே,இறப்புச் சான்றிதழோடு ஒரு மெமோவை, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருக்க வேண்டும்.
அவர் இறந்துவிட்டார். மேற்கொண்டு, வழக்கை நடத்த வேண்டாம் எனத் தாக்கல் செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்ததாக நீதிமன்றத் தீர்ப்பில் இல்லை. சசிகலா தரப்பு ஏன் இதைத் தாக்கல் செய்யவில்லை. இந்தக் கேள்வி முக்கியமான கேள்வி. ஏனென்றால், அவர் (சசிகலா) முதலமைச்சராக ஆவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த நேரம். தன்னுடைய சுய லாபத்திற்காக, இதைஅவர் செய்யவில்லை. அதைச் செய்திருந்தால், இந்த வழக்கில் ஜெயலலிதா பெயரேவந்திருக்காது என்பதுதான் சட்ட நிலைமை" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)