Skip to main content

எஸ்எஸ்எல்சி மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

Published on 22/08/2019 | Edited on 22/08/2019

பள்ளி மாணவர்களிடையே அறிவியல் படிப்புகளின் மீது ஆர்வத்தைத் தூண்டும் நோக்கில், ஆண்டுதோறும் தேசிய அளவில் திறனாய்வுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் இரண்டு நிலைகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வு மாநில அளவிலும், இரண்டாம் நிலைத்தேர்வு தேசிய அளவிலும் நடத்தப்படும். இதில், நிர்ணயிக்கப்பட்ட கட்ஆப் மதிப்பெண்களுக்கு மேல் பெறக்கூடிய மாணவர்களுக்கு அவர்கள் பிளஸ்1, பிளஸ்2 படிப்பைத் தொடரும்போது, மாதந்தோறும் 1250 ரூபாய் உதவித்தொகையும், இளநிலை, முதுநிலை படிப்புகளின்போது மாதம் 2000 ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்படும். 

 

tamilnadu 10 th students apply national talent search examination notification 2019

 


நடப்பு 2019-2020ம் கல்வி ஆண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி பயிலும் மாணவர்கள், வரும் நவம்பர் மாதம் 3ம் தேதி நடைபெற உள்ள தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு (என்டிஎஸ்இ) விண்ணப்பிக்கலாம் என அரசுத்தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 22.8.2019ம் தேதி முதல் வரும் செப்டம்பர் 7ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் 50 ரூபாய் தேர்வுக்கட்டணம் சேர்த்து, சம்பந்தப்பட்ட பள்ளித்தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 7.9.2019. மேலும் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அரசுத்தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.