/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/MKS3333_0.jpg)
சென்னை கிண்டியில் உள்ள சோழா நட்சத்திர ஹோட்டலில் CII தொழில் கூட்டமைப்பு - எல்காட் சார்பில் 'கனெக்ட்' என்ற தொழில்துறை கருத்தரங்கை இன்று (26/11/2021) காலை 10.30 மணிக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இரண்டு நாட்கள் நடைபெறும் கருத்தரங்கையொட்டி தரவு மைய கொள்கையையும் முதலமைச்சர் வெளியிட்டார்.
அத்துடன், அரசின் மின் ஆளுமை நிறுவனம் - சென்னை கணிதத்துறை நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இக்கருத்தரங்கில் ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். அதேபோல், தமிழ்நாடு அமைச்சர்கள் கே.என்.நேரு, த.மனோ தங்கராஜ்மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்தரங்கில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "தகவல் தொழில்நுட்பம்தான் காலத்தைச் சுழல வைத்துக்கொண்டிருக்கிறது. தகவல் தொழில்நுட்பத்துறையில் புதிய முதலீட்டாளர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். தகவல் தொழில்நுட்பத்துக்காக தனித்துறையை உருவாக்கியது திமுகஆட்சிதான். சென்னை தரமணி முதல் மாமல்லபுரம் வரையில் ஐடி எக்ஸ்பிரஸ் சாலையாக மாற்றியது திமுகஆட்சி. கூர்மையான அறிவுத்திறன் படைத்தவர்களாக தமிழக இளைஞர்கள் திகழ்கிறார்கள்; அவர்களை ஐடி துறையினர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தரவு மையம் அமைப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் சிறந்து விளங்குகிறது.
தொழில் தொடங்க தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு வழங்கும். 12,525 கிராம ஊராட்சிகளிலும் தரமான இணைய சேவை வழங்கப்படுவதன் மூலம் ஊரகப்பகுதிகள் மேம்படும். ஒரு மாநிலத்திற்கு முதலீடுகளைக் கொண்டுவருவதில் தகவல் தொழில்நுட்பத்துறை முன்னிலை வகிக்கிறது". இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)