Skip to main content

தமிழகத்திற்கான 5 தொடர்வண்டிப் பாதை திட்டங்களை அரசு ரத்து செய்யக்கூடாது! அன்புமணி 

Published on 11/10/2019 | Edited on 11/10/2019

 

தமிழகத்திற்கான 5 தொடர்வண்டிப் பாதை திட்டங்களை அரசு ரத்து செய்யக்கூடாது என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து மாமல்லபுரம் வழியாக கடலூர் வரை தொடர்வண்டிப் பாதை அமைக்கும் திட்டம் உள்ளிட்ட 5 தொடர்வண்டிப் பாதை திட்டங்களை கைவிடும்படி தெற்கு தொடர்வண்டித் துறைக்கு இந்திய தொடர்வண்டி வாரியம் ஆணையிட்டிருக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கக் கூடிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொடர்வண்டி திட்டங்கள் கைவிடப்படுவது கண்டிக்கத்தக்கது ஆகும்.

 

Anbumani Ramadoss



தெற்கு தொடர்வண்டித் துறைக்கு தொடர்வண்டி வாரியம் எழுதியுள்ள கடிதத்தில் சென்னை- மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலூர், சென்னை ஆவடி- கூடுவாஞ்சேரி, திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை, ஈரோடு - பழனி, அத்திப்பட்டு - புத்தூர் ஆகிய 5 திட்டங்களால் பொருளாதார பயன்கள் கிடைக்காது என்பது உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும், அதனால் இந்த திட்டங்களுக்காக இனி ஒரு பைசா கூட செலவழிக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக இத்திட்டங்கள் அனைத்தும் கைவிடப்படும். இதேபோல், தெற்கு தொடர்வண்டித்துறை மூலம் கேரளத்தில் செயல்படுத்தப் பட வேண்டிய 5 திட்டங்களையும் கைவிடும்படி இந்திய தொடர்வண்டி வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

 

இந்திய தொடர்வண்டி வாரியம் கைவிடும்படி அறிவுறுத்தியுள்ள 5 திட்டங்களுமே பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அரங்க. வேலு தொடர்வண்டித்துறை இணை அமைச்சராக இருந்த போது தமிழகத்தின்  முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ஆகும். 2008-09 ஆண்டுக்கான தொடர்வண்டி நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டத்தின்படி சென்னை பெருங்குடியிலிருந்து மாமல்லபுரம், புதுச்சேரி, கடலூர் வரை 178 கிலோமீட்டர் தொலைவுக்கு தொடர்வண்டிப் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அத்திட்டத்திற்காக ரூ.523 கோடி ஒதுக்கவும் ஒப்புதல் அளிக்கப் பட்டது. சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு இணையாக தொடர்வண்டிப் பாதை அமைக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் தான் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது.


 

கிழக்குக் கடற்கரை தொடர்வண்டிப்பாதை திட்டத்திற்காக சென்னையிலிருந்து கடலூர் வரை புதிய பாதை அமைக்கப்படும் பட்சத்தில், கடலூர் முதல் காரைக்குடி வரை இப்போதுள்ள பாதையை மேம்படுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், காரைக்குடியிலிருந்து  இராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர் வழியாக கன்னியாகுமரிக்கு 463 கிமீ புதிய பாதை அமைக்கலாம் என்றும் அப்போது முடிவு செய்யப்பட்டு ஆய்வுகளும் நடத்தப்பட்டன. இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு 2009-ஆம் ஆண்டில் அமைந்த புதிய அரசில் பா.ம.க. பங்கேற்காத நிலையில், தமிழகத்திலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அழுத்தம் கொடுக்காததால் இந்தத் திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. அதனால், காரைக்குடி-கன்னியாகுமரி புதியபாதை திட்டத்தை முதலில் கைவிட்ட தொடர்வண்டி வாரியம், இப்போது அடுத்தக்கட்டமாக சென்னை- மாமல்லபுரம் - கடலூர் திட்டத்தையும் கைவிட்டிருக்கிறது.

 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு நடைபெறுவதால் மாமல்லபுரம் உலகப்புகழ் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, சென்னை முதல் புதுச்சேரி வரையிலான கிழக்குக் கடற்கரைச் சாலையை பொழுதுபோக்கு சாலையாக  மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மற்றொருபுறம் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் தொடர்வண்டிகளில் கடுமையான நெரிசல் நிலவுகிறது. இத்தகைய சூழலில் கிழக்குக் கடற்கடை தொடர்வண்டிப் பாதை அமைக்கப்பட்டால் அது சுற்றுலா வளர்ச்சிக்கும்,  தென் மாவட்டங்களுக்கும் கூடுதல் தொடர்வண்டிகளை இயக்குவதற்கும் பெரும் உதவியாக இருக்கும்.


 

ஆவடி - கூடுவாஞ்சேரி இடையிலான பாதை திருப்பெரும்புதூர், ஓரகடம், அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களை கொண்டு செல்லவும், உற்பத்தி செய்யப் பட்ட பொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்லவும் உதவும். அதேபோல், அத்திப்பட்டு - புத்தூர் தொடர்வண்டிப் பாதை அமைக்கப்படும் பட்சத்தில் சென்னை- திருவள்ளூர் வழித்தடத்தில் நெரிசல்  குறைவதுடன், எண்ணூர் துறைமுகத்துக்கு சரக்குகளை கொண்டு செல்வதற்கும் பயனுள்ளதாக அமையும்.

 

திண்டிவனம் - திருவண்ணாமலை பாதையும், ஈரோடு - பழனி பாதையும் ஆன்மிகப் பயணிகளுக்கு வசதியாக இருக்கும். அந்தப் பகுதிகளின் தொழில் வளர்ச்சிக்கும் இந்தத் திட்டங்கள் வழிவகுக்கும். எனவே, தமிழகத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கக் கூடிய இந்த 5 தொடர்வண்டித் திட்டங்களையும்   ரத்து செய்யும் முடிவை தொடர்வண்டி வாரியம் கைவிட வேண்டும். மாறாக, மாநில அரசுடன் இணைந்து இந்த 5 திட்டங்களையும் விரைந்து செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“புதிய பேருந்துகளை அரசு வாங்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani Ramadoss says Government should buy new buses

புதிய அரசு பேருந்துகளையும், தமிழக அரசு வாங்க வேண்டும் என்றும், பழைய பேருந்துகளைப் பராமரிக்க, உதிரி பாகங்களை வாங்க அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துநர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதைத்  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும், அவற்றைப் பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலை ஏற்படுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய அவல நிலைக்கு தி.மு.க தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள் கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள் ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள் வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

திரவ நைட்ரஜன் உணவுப் பொருள்; உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
liquid nitrogen foodstuff; Food Safety Department action order

திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன் பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள் விற்கக் கூடாது என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. திரவ நைட்ரஜன் உணவுப்பொருள் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு நைட்ரஜன் ஐஸ் கலந்த எந்தவொரு உணவு பொருள்களையும் கொடுக்கக் கூடாது எனவும், உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.