Skip to main content

வெளிநாடுகளில் தவிக்கும் அத்தனை தமிழர்களையும் மீட்டு வருவோம்! -மத்திய அரசு உத்தரவாதம்!

Published on 01/08/2020 | Edited on 01/08/2020
chennai high court

 

 

கரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் அத்தனை பேரையும், தாயகம் மீட்டுவருவதில் தீர்க்கமாக இருப்பதாக, மத்திய அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.

 

கரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள், சொந்த ஊர்களுக்குத் திரும்ப ஏதுவாக,  தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி, திமுக சார்பில் அதன் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதே கோரிக்கையுடன் ராஜா முகமது என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கு கடந்த முறை  விசாரணைக்கு வந்தபோது, வெளிநாடுகளில் சிக்கியுள்ள 25,939 தமிழர்களைத் தாயகம் அழைத்து வர எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

 

இந்த நிலையில், இந்த வழக்கு  நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

 

அதில், கரோனா  காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் அத்தனை தமிழர்களையும் தாயகம் மீட்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும்,வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை மீட்டு வர,  ஜூன் 6- ம் தேதி முதல் ஜூலை 20 -ம் தேதி வரை, 101 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.  கடந்த  20-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5 ம் தேதி வரை, 58 விமானங்கள் இயக்கப்படவுள்ளன. இந்த வழக்கு தொடர்ந்த பின், மொத்தமாக  286 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.

 

மேலும், ஆகஸ்ட் 5- ம் தேதி முதல் 31-ம் தேதி வரை, இந்தியாவுக்கு இயக்கவுள்ள 792 விமானங்களில், தமிழகத்துக்கு 127 விமானங்கள் இயக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மத்திய அரசின் விளக்கத்தை பதிவு செய்த நீதிபதிகள், நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி, குறிப்பிட்ட கால அட்டவணையில் விமானங்கள் இயக்கப்படுவதை  உறுதி செய்ய வேண்டுமென அறிவுறுத்தினர். மத்திய அரசு ஒருவேளை, நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள விவரங்களின்படி விமானங்களை இயக்க தவறும் பட்சத்தில், இதே விவகாரத்தில்  நீதிமன்றத்தை மீண்டும்  அணுக திமுகவிற்கு அனுமதியளித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தில் 1749 வேட்பு மனுக்கள் தாக்கல்! 

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
1749 nominations filed in Tamil Nadu
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு (கோப்புப்படம்)

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. மேலும் தமிழகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய இன்றே கடைசி (27.03.2024) நாள் ஆகும்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 1403 பேர் தங்களது வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர் என்ற விவரம் வெளியாகியுள்ளது. இதற்கான தகவலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (28.03.2024) நடைபெற உள்ளது. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

அதாவது திருவள்ளூர் - 31, வட சென்னை - 67, தென் சென்னை - 64, மத்திய சென்னை - 58, ஸ்ரீபெரும்புதூர் - 53, காஞ்சிபுரம் - 31, அரக்கோணம் - 44, வேலூர் - 50, கிருஷ்ணகிரி - 41, தருமபுரி - 44, திருவண்ணாமலை - 49, ஆரணி - 48, விழுப்புரம் - 31, கள்ளக்குறிச்சி - 37, சேலம் - 52, நாமக்கல் - 58, ஈரோடு - 52, திருப்பூர் - 46, நீலகிரி - 33, கோயம்புத்தூர் - 59, பொள்ளாச்சி - 44, திண்டுக்கல் - 35, கரூர் - 73, திருச்சிராப்பள்ளி - 48, பெரம்பலூர் - 56, கடலூர் - 30, சிதம்பரம் - 27, மயிலாடுதுறை - 30, நாகப்பட்டினம் - 26, தஞ்சாவூர் -  36, சிவகங்கை - 39, மதுரை - 41, விருதுநகர் - 41, ராமநாதபுரம் -  56, தூத்துக்குடி - 53, தென்காசி - 37, திருநெல்வேலி - 53, கன்னியாகுமரி - 33 என மொத்தம் 1749 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. 

Next Story

“ஓ.பி.எஸ். இரட்டை இலையைப் பயன்படுத்தத் தடை தொடரும்” - உயர்நீதிமன்றம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
ban on using OPS aiadmk symbol will continue says Madras High Court

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், ‘எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்’ என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு பல கட்ட விசாரணைக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் கடந்த 18 ஆம் தேதி, “அ.தி.மு.க. இரட்டை இலை சின்னம், கொடி ஆகியவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதிக்கப்படுகிறது” என அதிரடி தீர்ப்பை வழங்கி இருந்தார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் அந்த மனுவில், ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதா இல்லையா என்ற வழக்கு நிலுவையில் உள்ளதால்,  அந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை தனக்கு கட்சியின் இரட்டை இலை, சின்னத்தையும் கொடியையும் பயன்படுத்த அனுமதியளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது, “அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பி.எஸ்க்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது; ஓ.பி.எஸ். இரட்டை இலை, கட்சியின் பெயர் ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த மேல்மூறையீடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டதோடு, இது தொடர்பாக ஓ.பி.எஸ் தேர்தல் ஆணையத்தை அணுகத் தடையில்லை என்றும் கூறியுள்ளது. இந்த வழக்கின் இறுதி விசாரணை ஜூன் 10 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.