Skip to main content

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; ‘21 பேர் மீது நடவடிக்கை’ - தமிழக அரசு

Published on 17/11/2023 | Edited on 17/11/2023

 

 Tamil Nadu Govt  explanation Action against 21 people for Tuticorin incident"

 

கடந்த 2018ம் ஆண்டு மே 22 ம் நாள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 13 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் பலத்த காயங்களை அடைந்தனர். ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

 

இந்த அறிக்கையின் அடிப்படையில் ஐஜி சைலேஷ் யாதவ், டிஐஜி கபில்குமார் சரத்கர், எஸ்பி மகேந்திரன், டிஎஸ்பி லிங்க திருமாறன், காவல் ஆய்வாளர்கள் திருமலை, ஹரிகரன், பார்த்திபன், சப் இன்ஸ்பெக்டர்கள் சொர்ணமணி, ரென்னீஸ், காவலர்கள் ராஜா சங்கர், சுடலைக்கண்ணு, தாண்டவ மூர்த்தி, சதீஷ்குமார், ராஜா, கண்ணன், மதிவாணன் என பல பேர் மீது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தில், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட 17 காவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டது.

 

இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக சமூக ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தது. ஆனால், இது நாள் வரை அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தது.

 

இது தொடர்பான மனு கடந்த 3ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?’ என தமிழக அரசிடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை நவம்பர் 17ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது. 

 

இந்த நிலையில், இது தொடர்பான மனு இன்று (17-11-23) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது அவர், “நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, அப்போதைய தூத்துக்குடி ஆட்சியர் வி.வெங்கடேஷ், தென்மண்டல ஐ.ஜி.யாக இருந்த ஷைலேஷ்குமார் யாதவ், எஸ்.பி.கபில்குமார் சரத்கர், துணை வட்டாட்சியராக இருந்த சேகர் உள்ளிட்ட 21 அதிகாரிகள் மீதான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது” என்று விளக்கம் அளித்தார். அதனை தொடர்ந்து, வாதங்களை கேட்டறிந்த சென்னை உயர்நீதிமன்றம், சமூக ஆர்வலர் ஹென்றி திபேன் தொடர்ந்த வழக்கை வரும் டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சொத்துக்காக தந்தையை கார் ஏற்றி கொலை செய்த மகன்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
Son father by car for property

தூத்துக்குடியில் சொத்துக்காக தந்தையை மகனே காரை ஏற்றி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மகன் சின்னதுரை. ஆழந்தா எனும் கிராமத்தில் 80 வயதான கருப்பசாமிக்கு  சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. அதை விற்ற முதியவர் கருப்புசாமி அதிலிருந்து வந்த 24 லட்சம் ரூபாயை சின்னத்துரையின் இரண்டு மகன்களின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மகன்கள் பெயரில் வங்கியில் போடப்பட்டுள்ள பணத்தை எடுத்துக் கொடுக்குமாறு தந்தை கருப்புசாமியிடம் சின்னதுரை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அடிக்கடி இது தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் தோட்டத்திற்கு சாலையில் நடந்து  சென்று கொண்டிருந்த தந்தை கருப்பசாமி மீது சின்னதுரை காரை மோதிவிட்டு கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story

‘கார் மோதி விபத்து; 3 பெண்கள் உயிரிழப்பு’ - முதல்வர் இரங்கல்!

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
incident of Mukhani village is located near Eral in Thoothukudi district

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே அமைந்துள்ளது முக்காணி கிராமம். இக்கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம் முக்காணி கிராமம் உள்ளது. இங்கு தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையின் ஓரமாக இன்று (23.06.2024) காலை 6.30 மணியளவில் நின்று தெரு குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். இவர்கள் மீது தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த நான்கு சக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது.  இந்த விபத்தில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த முக்காணி கிராமத்தைச் சேர்ந்த நட்டார் சாந்தி (வயது 50) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்த அமராவதி (வயது 58) மற்றும் பார்வதி (வயது 35) ஆகிய இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இந்த துயரகரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன். இவ்விபத்தில் பலத்த காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சண்முகதாய் (வயது 55) சுந்தரம் என்பவருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.