Skip to main content

தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் செயல்படாது!

Published on 06/04/2023 | Edited on 06/04/2023

 

tamil nadu fully ration shops closed issue 
மாதிரி படம்

 

சிதம்பரம் லால்கான் தெருவைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திர ராஜா. இவர் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளராகப் பணியாற்றி வருகிறார். மேலும் தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இவர் புதன்கிழமை காலை 10 மணி அளவில் சிதம்பரம் நகரத்திற்குட்பட்ட மெய் காவல் தெருவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இவரை இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் வழிமறித்துள்ளனர். இவர் நின்றபோது அவர்கள் கத்தியை எடுத்துள்ளனர். இதனைப் பார்த்து பயந்து இருசக்கர வாகனத்தை அதே இடத்தில் போட்டுவிட்டு இவர் ஓடியுள்ளார்.

 

அப்போது இவரை விடாமல் துரத்திச் சென்று இவரது தலையில் மூன்று இடத்தில் பலமாக வெட்டியுள்ளனர். இவர்கள் வெட்டும்போது தடுத்ததால் இவரது கைவிரல் துண்டாகியுள்ளது. இதுகுறித்து அப்பகுதியில் உள்ளவர்கள் கூச்சலிட்டதால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் இவரை 108 அவசர ஊர்தி மூலம் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த சிதம்பரம் நகர காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் வெட்டப்பட்ட இடத்தில் இருந்த ரத்தக் கரைகளை காவல்துறையினர் தண்ணீர் ஊற்றி அழித்தனர்.

 

இதேபோல் கடந்த மாதம் 21 ஆம் தேதி இரவு, இவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பீர் பாட்டிலால் மர்ம நபர்கள் இவரது தலையில் அடித்ததால் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இவர் மீது மீண்டும் பட்டப் பகலில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள நேரத்தில் மர்ம நபர்களால் கொலைவெறி தாக்குதல் நடைபெற்ற சம்பவம் தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்ரமணியன் கடலூரில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "ரேஷன் கடை பணியாளர் சங்க மாநிலத் தலைவர் ஜெயசந்திர ராஜாவை மர்ம நபர்கள் தாக்கியது தொடர்பாக போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பட்டப் பகலிலேயே அவரை வெட்டிக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். திட்டமிட்டே மீண்டும் மீண்டும் தாக்கி வருகின்றனர். எனவே தமிழக உள்துறை செயலாளர் இதில் தலையிட்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது விரைவில் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்தை கண்டித்து வியாழக்கிழமை (06.04.2023) தமிழகம் முழுவதும் உள்ள 30 ஆயிரம் ரேஷன் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்" என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஆந்திர அரசு மீது வழக்கு தொடர வேண்டும்.. ’ - தமிழக விவசாயிகள் வலியுறுத்தல்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
'A case should be filed against Andhra Govt..' - Tamilnadu farmers insist

ஆந்திர மாநிலம், குப்பம் தொகுதிக்கு உட்பட்ட ரெட்டிகுப்பம் பகுதியில் உள்ள பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெட்டிகுப்பம் பகுதியில் அடிக்கல் நாட்டினார். இந்தத் தடுப்பணை ரூ.215 கோடியில் கட்டப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பணையின் மூலம், ஆந்திர அரசு 0.6 டி.எம்.சி. நீரை தேக்கிவைக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த நீரினை குப்பம் தொகுதி மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கு பூர்த்தி செய்யவும் ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் பாரத ஸ்டேட் பேங்க் முன்பு நடந்த அந்த ஆர்ப்பாட்டத்தில், ‘உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் 1892 மைசூர் ராஜ்ஜியம் மற்றும் சென்னை மாகாணம் இடையிலான நதிநீர் ஒப்பந்தத்தை மீறி அராஜக போக்குடன் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட 215 கோடி ரூபாய் மதிப்பில் நிதி ஒதுக்கி ஆந்திர அரசு அடிக்கல் நாட்டியுள்ளது.

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் அராஜகத்தை தடுத்து நிறுத்த வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கில் விரைந்து தீர்ப்பு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தனித்துவமாக செயல்படும் ஆந்திர அரசு மீது அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசை வலியுறுத்துகிறோம்’ எனத் தெரிவித்தனர். 

தமிழ்நாடு விவசாயிகள் சங்கச் செயலாளர் முல்லை மற்றும் அசோகன் தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆந்திர அரசைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு விவசாயிகள் கூட்டமைப்பு சங்கங்கள் கலந்து கொண்டன.

Next Story

‘அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் ஆவணங்கள் பறிமுதல்’ - லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Former ADMK MLA Seizure of documents at home  Anti Corruption Bureau 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர் செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று (28.02.2024) காலை 10 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2011 - 2016 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் நகராட்சி தலைவராக சத்யாவின் கணவர் பன்னீர் செல்வம் இருந்தபோது, பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனம் நிறுத்துமிடத்தை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக டெண்டர் விடுவதில் ரூ. 20 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். 

பன்னீர்செல்வம் மற்றும் அப்போதைய நகராட்சி கமிஷனர் பெருமாள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், தற்போது இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி பண்ருட்டி மற்றும் சென்னை உள்ளிட்ட 5 இடங்களில் அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது. லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யாவின் கணவரும் முன்னாள் நகர்மன்றத் தலைவர் பன்னீர்செல்வத்தின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் கடந்த 10 மணி நேரமாக நடந்து வரும் சோதனையில் குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய 47 ஆவணங்கள், விவசாய நிலம் மற்றும் வீட்டு மனை சொத்து ஆவணங்கள் என ரூ. 15 கோடி மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “கடலூர் மாவட்டம், பண்ருட்டி தொகுதி அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் எண்ணத்தோடு லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவிவிட்டு சோதனை மேற்கொண்டிருக்கும் தி.மு.க. அரசின் இச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.