
மும்மொழி கொள்கையை திணிக்க நினைக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலச் சங்கத்தினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தேவபாண்டலம் ஆற்றுப்பாலம் அருகே விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி சார்பில் இந்தி திணிப்பு மற்றும் புதிய கல்விக் கொள்கையை திணிக்க நினைக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறைக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாத ஒன்றிய அரசை கண்டித்தும் தமிழ்நாடு கட்டுமான நல வாரியத்தின் தலைவர் பொன் குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாயி தொழிலாளர்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு புதிய கல்விக் கொள்கையை திணிக்க நினைக்கும் ஒன்றிய அரசிற்கு எதிராக தங்களது கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அரசு கட்டுமான நலவாரியத்தின் தலைவர் பொன்.குமார், தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு நடத்தி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஹிந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கு ஆசிரியர்கள் உள்ள நிலையில் தமிழ் மொழிக்கு ஆசிரியர்கள் இல்லாத நிலை தமிழ்நாட்டில் இருந்து வருவதாகவும், தமிழ்நாட்டில் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் மொழிகளை திணிக்க நினைக்கும் ஒன்றிய அரசு பீகாரில் தமிழைப் படிக்க அறிவுறுத்துவார்களா என்றும், 3200 ஆண்டுகளுக்கு முற்பட்ட மொழி தமிழ் மொழி என்றும் இந்த தமிழ் மொழியை அழிக்கும் முயற்சியில் எவராலும் வெற்றி பெற முடியாது என்றும் தமிழ் மீது கை வைத்தால் அவர்களது தலை தப்பாது என்றும் அவர் தெரிவித்தார்.