
வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனை தொடர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ‘மிக்ஜம்’ புயல் உருவாகவுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதையடுத்து, காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நிவாரணப் பணிகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்குத் துணையாக நிற்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, ‘அடுத்த இரு நாட்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் அமைச்சர்கள், சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக அமைப்புகளில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் அவர்களது பகுதியில் மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு உதவிட வேண்டும். நிவாரணப் பணிகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்குத் துணைநிற்க வேண்டும்.
மேலும், மக்களுக்கான உணவு, உடை, மருத்துவ வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு உதவிடும் வகையில் அரசு அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் தேவையான உதவிகளையும் செய்து ஒத்துழைப்பு தர வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.