surprise inspection by the  Education Officer; The dismissal of the head teacher!

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்தில் சின்னவேலம்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், சேலத்தைச் சேர்ந்த பாரதி என்பவர் தலைமை ஆசிரியராகவும், ராஜம் என்பவர் இடைநிலை ஆசிரியராகவும் பணியாற்றுகின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு திடீரென்று இப்பள்ளிக்குச் சென்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட இரண்டு ஆசிரியர்களுமே பணியில் இல்லை.

Advertisment

அங்கு, ஒரே ஒரு பெண் மட்டும் குழந்தைகளுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அவரிடம் விசாரித்தபோது, தான் ஒரு தற்காலிக ஆசிரியர் என்றும்தலைமை ஆசிரியரும், இடைநிலை ஆசிரியரும் பள்ளிக்கு வரும் வரை குழந்தைகளுக்குப் பாடம் நடத்துவேன் என்றும் சொல்லி இருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், பள்ளியில் ஆசிரியர்களின் செயல்பாடு குறித்து விசாரித்து, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் சந்தோஷுக்கு உத்தரவிட்டார்.

Advertisment

தலைமை ஆசிரியர் பாரதி, இடைநிலை ஆசிரியர் ராஜம் ஆகியோரிடம் விசாரித்தபோது அவர்கள் தொடர்ச்சியாக பள்ளிக்கு குறித்த நேரத்தில் பணிக்கு வராமல் இருப்பதும், முன் அனுமதியின்றி அவர்களே நியமித்த ஒரு இளம்பெண் மூலம் கற்பித்தல் பணிகளை மேற்கொண்டு வந்ததும் தெரியவந்தது. ஆசிரியர் பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக அவர்கள் இருவரையும் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் சந்தோஷ், பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் நடந்த பள்ளி, மலைக் கிராமப் பள்ளி ஆகும். இங்கு மட்டுமின்றி அனைத்து மலைக் கிராமங்களில் உள்ள பள்ளிகளிலுமே ஆசிரியர்கள் குறித்த நேரத்திற்கு பணிக்குச் செல்வதில்லை.

மாதம் லட்சம் ரூபாய் ஊதியம் பெறக்கூடிய ஆசிரியர்கள், தங்கள் கடமையைச் சரிவர செய்யாததோடு, உள்ளூரைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ்2 படித்த இளைஞர்களை தாங்களாகவே நியமித்து, பாடம் நடத்தி வருவதும் நடக்கிறது.அனைத்து மலைக் கிராமங்களிலும் பள்ளிக்கல்வித்துற அலுவலர்கள் திடீர் ஆய்வு நடத்தி, ஒழுங்கீனமாக செயல்பட்டு வரும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் நேர்மையான ஆசிரியர்கள்.