supreme court verdict Perarivalan release  Ramadoss statement

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை அனுபவித்து வந்த பேரறிவாளன் பல ஆண்டுகால சட்ட போராட்டத்திற்கு பின் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தவறாக தண்டிக்கப்பட்டு 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. பேரறிவாளனின் விடுதலை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அதையும் கடந்து குரலற்றவர்களுக்கும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

உச்சநீதிமன்றத்தின் முன் நிலுவையில் உள்ள வழக்கில் ஒருவருக்கு முழுமையான நீதி வழங்க வேண்டும் என்பதற்காக உச்சநீதிமன்றம் அதன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தலாம் என்ற இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவை பயன்படுத்தி இந்தத் தீர்ப்பை நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு வழங்கியிருக்கிறது. பேரறிவாளனின் விடுதலைக்கு சிறையில் இருந்தபடியே அவர் நடத்தி வந்த நீண்ட நெடிய சட்டப் போராட்டம் தான் முதன்மைக் காரணம் என்பதில் ஐயத்திற்கு இடமில்லை.

பேரறிவாளளனின் இந்த விடுதலையே மிகவும் தாமதிக்கப்பட்ட ஒன்று தான். பேரறிவாளனின் சட்டப்பூர்வ விடுதலை 2014-ஆம் ஆண்டில் நிகழ்ந்திருக்க வேண்டும். பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், மாநில அரசு விரும்பினால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகளுக்கு உட்பட்டு விடுதலை செய்யலாம் என்று கூறியிருந்தது. அதன்படி பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய அப்போதைய அரசு முடிவு செய்த போது, அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்போதைய மத்திய அரசு வழக்கு தொடர்ந்ததால் தான் பேரறிவாளனின் விடுதலை 8 ஆண்டுகள் தாமதமாகியிருக்கிறது.

அதன்பிறகும் கூட, பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், அவரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்று 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அதனடிப்படையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை 09.09.2018 அன்று தமிழக அமைச்சரவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், அதன்பின் 900 நாட்கள் கழிந்த நிலையில், அது குறித்து தம்மால் முடிவெடுக்க முடியவில்லை என்று கூறி, 7 தமிழர் விடுதலை குறித்த கோப்புகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துவிட்டதாக ஆளுனர் மாளிகை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. 7 தமிழர்களை விடுதலை செய்வதைத் தவிர வேறு வழியே இல்லாத நிலையில் அதை தாமதப்படுத்துவதற்காக நடந்த முயற்சி தான் இது என்பதில் ஐயமில்லை. ஆளுனர் மாளிகையின் இந்தப் போக்கு குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

பேரறிவாளனின் விடுதலை எனக்கு தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியும், மனநிறைவும் அளிக்கிறது. பேரறிவாளனின் விடுதலைக்காக தொடர்ந்து அரசியல் அழுத்தங்களை கொடுத்து வந்தவன் என்ற முறையில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு நிம்மதியளிக்கிறது. பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டு இருந்தாலும் கூட, அவர் இழந்த அவரது வாழ்க்கையின் மிக முக்கியமான கால கட்டமான 31 ஆண்டுகளை எவராலும் திருப்பி அளிக்க முடியாது. இனி பேரறிவாளன் அவரது இயல்பு வாழ்க்கையையும், இல்லற வாழ்க்கையையும் குடும்பத்தினருடனும், நண்பர்களுடன் தொடங்க வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பேரறிவாளன் விடுதலை குறித்த உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மனித உரிமை சார்ந்த கோணத்திலும் மிகவும் முக்கியமானதாகும். இந்தத் தீர்ப்பு ராஜிவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், ஜெயக்குமார், இராபர்ட் பயஸ் ஆகிய 6 பேருக்கும் பொருந்தும். உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பை சுட்டிக்காட்டி அவர்களின் விடுதலைக்கான ஆணையை உச்சநீதிமன்றத்திலிருந்து தமிழக அரசே பெற முடியும்.

அதற்கான சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும். அவர்கள் விடுதலை செய்யப்படும் வரை முருகன், சாந்தன், ஜெயக்குமார், இராபர்ட் பயஸ் ஆகிய நால்வரையும் பரோலில் விடுதலை செய்ய வேண்டும். இவர்கள் மட்டுமின்றி 34 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன் உள்ளிட்ட நீண்ட காலமாக சிறை தண்டனை அனுபவித்து வரும் அனைவரையும் 161-ஆவது பிரிவின்படி விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.