Skip to main content

சிறுவன் கொலை வழக்கு; குற்றவாளிக்கு மரண தண்டனை குறைப்பு 

Published on 22/03/2023 | Edited on 22/03/2023

 

Supreme Court reduced the sentence accused by boy case

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள கார்குடல் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சிநாதன், மகேஸ்வரி தம்பதியரின் மகன் சுரேஷ்(வயது7). கடந்த 2009ம் ஆண்டு கொளஞ்சிநாதன் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். அப்போது சுரேஷ் விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள மெட்ரிக் பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வந்தபோது பள்ளிக்கு சொந்தமான வேனில் சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். 27.07.2009 அன்று சுரேஷ் பள்ளிக்குச் சென்றுவிட்டு வேனிலிருந்து இறங்கி வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது அவனை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடத்திச் சென்றனர். மகன் வீடு திரும்பாததால் மகேஸ்வரி கம்மாபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

 

அன்றைய மறுநாள் மகேஸ்வரியின் செல்போனை தொடர்பு கொண்ட மர்ம நபர் சுரேஷை கடத்தி வைத்திருப்பதாகவும் அவனை விடுவிக்க வேண்டும் என்றால்  5 லட்சம் தர வேண்டும், போலீசுக்குப் போனால் அவனை உயிரோடு பார்க்க முடியாது என்று மிரட்டினான். இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து சுரேஷை மீட்கும் முயற்சிகளில் இறங்கினர். அதனைத் தொடர்ந்து அடிக்கடி மகேஸ்வரியுடன் பேசிய மர்ம நபர் பேசிய தொலைப்பேசிகள், செல்போன் நம்பர்களை வைத்து அந்த நபர் எங்கிருந்து பேசினான் என்பதை போலீசார் கண்டுபிடித்து பின் தொடர்ந்தனர். முதலில் திட்டக்குடியில் உள்ள ஒரு காயின்பாக்ஸ் ஃபோனில் இருந்து அந்த நபர் பேசினான். இதையடுத்து போலீசார் அந்தப் பகுதியில் மாறுவேடத்தில் கண்காணித்தனர். அப்போது அந்த நபர் இருப்பிடத்தை மாற்றி ரூ.5 லட்சத்துடன் பெரம்பலூர் வருமாறு மகேஸ்வரியிடம் கூறினான்.

 

இதனால் மகேஸ்வரியும் தனிப்படை போலீசாரும் பெரம்பலூர் சென்றனர். ஆனால் கடத்தல்காரனிடமிருந்து வேறு எந்தத் தகவலும் வரவில்லை. அதே நேரத்தில் மகேஸ்வரியின் உறவினரான பாலாயி என்பவரும் சுந்தரராஜன் என்ற அவரது ஆண் நண்பரும் பெரம்பலூரில் சுற்றியபடி மகேஸ்வரியை கண்காணித்தனர். இதைக் கண்டுபிடித்த போலீசார் அந்த இருவரையும் மடக்கிப் பிடித்து விசாரித்தபோது சுரேசை கடத்தி சாக்கு மூட்டையில் கட்டி பெரம்பலூர் அருகே உள்ள குண்டலம் ஏரியில் வீசியதாகத் தெரிவித்தனர்.  இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் ஏரிக்குள் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டுக் கிடந்த மாணவனின்  உடலை மீட்டனர். இந்த வழக்கில் கம்மாபுரம் போலீசார்,  சுந்தரராஜன்(25), பாலாயி(34) ஆகியோரை கைது செய்தனர்.

 

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று கடந்த 2010 செப்டம்பர் 30 ஆம் தேதி அன்று மரண தண்டனை உறுதி செய்தது. அதனைத் தொடர்ந்து இந்த தண்டனை 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுந்தரராஜன் தனது தண்டனையைக் குறைக்க மேல்முறையீடு செய்திருந்தார். இதன் தீர்ப்பு நேற்று வெளியானது அதில், அவர் குற்றம் செய்தபோது அவருக்கு 23 வயது. மற்றும் 2009 முதல் சிறையில் இருக்கிறார். 2013ல் சிறையிலிருந்து தப்பிக்கும் முயற்சியைத் தவிர, அவரது நடத்தை திருப்திகரமாக இருந்தது. இதன் காரணமாக அவரது மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மரண தண்டனையின் விளிம்பில் இருந்தவருக்கு தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors appeared in the office of the ed

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் இன்று (25.04.2024) அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ளனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.