Skip to main content

உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை விரைவாக தமிழ் மொழியில் வெளியிட வேண்டும்! பாமக வலியுறுத்தல்

Published on 18/07/2019 | Edited on 18/07/2019

 

தமிழ்நாடு சார்ந்த முக்கிய வழக்குகளின் தீர்ப்புகளை விரைந்து தமிழில் மொழிபெயர்த்து உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

உச்சநீதிமன்றத்தின் முக்கியமான தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடும் திட்டத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்திருக்கிறார். இது மிகவும் வரவேற்கத்தக்கது. எனினும், முதற்கட்டமாக வெளியிடப்பட்ட 100 தீர்ப்புகளில் ஒன்று கூட தமிழில் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.
 

இந்தியக் குடியரசுத் தலைவரின் அறிவுரையை ஏற்று, ஆங்கிலம் தெரியாத வழக்குதாரர்கள் தங்களின் வழக்கு குறித்த விவரங்களை தாங்களே படித்து தெரிந்து கொள்ள வசதியாக, ஒவ்வொரு மாநிலத்தையும் சேர்ந்த மேல்முறையீடுகள் மீதான தீர்ப்புகள் ஆங்கிலத்தில் மட்டுமின்றி சம்பந்தப்பட்ட மாநில மொழியிலும் மொழி பெயர்த்து வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் அறிவித்திருந்தது. முதற்கட்டமாக   ஆந்திரா, அஸ்ஸாம். சத்தீஸ்கர், தில்லி, ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், மராட்டியம், ஒதிஷா, திரிபுரா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தர்காண்ட் ஆகிய 12 மாநிலங்களைச் சேர்ந்த 100 வழக்குகளின்  தீர்ப்புகள் தெலுங்கு, அஸ்ஸாமி, இந்தி, மராத்தி, ஒரியா, வங்காளம், இந்தி ஆகிய 7 மொழிகளில்  மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இவற்றை குடியரசுத் தலைவர் வெளியிட்டிருக்கிறார்.


 

 

உச்சநீதிமன்றத்தின் சார்பில் கடந்த ஜூலை 3-ஆம் தேதி அதிகாரப்பூர்வமற்ற வகையில் வெளியிடப்பட்ட செய்தியில், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மாநில மொழிகளில் வெளியிடும் திட்டத்தின் கீழ் ஆங்கிலம் தவிர இந்தி, கன்னடம், ஒரியா, தெலுங்கு, அஸ்ஸாம் ஆகிய 5 மொழிகளிள் சம்பந்தப்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த வழக்குகள் மொழியாக்கம் செய்து தரப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்தப் பட்டியலில் தமிழ் இல்லாதது குறித்து தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் வெளியிடப் படவுள்ள முதற்கட்ட மாநில மொழிகள் பட்டியலில் தமிழும் சேர்க்கப்படும் என்று விளக்கமளிக்கப்பட்டது.


 

supreme-court-delhi



இதனால் தமிழ் மொழியிலும் முதல் கட்டத்திலேயே தீர்ப்புகள் மொழிபெயர்க்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழ் மொழியில் தீர்ப்புகள் வெளியாகாதது மிகவும் வேதனை அளிக்கிறது. உச்சநீதிமன்றத்தால் முதலில் அறிவிக்கப்பட்ட 5 மொழிகள் பட்டியலில் இடம் பெறாத மராட்டியம், வங்காளம் ஆகிய மொழிகளில் கூட தீர்ப்புகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழ் புறக்கணிக்கப்பட்டிருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அதிலும் குறிப்பாக முதல் கட்டத்திலேயே தமிழ் மொழியிலும் தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே உறுதியளித்ததாக செய்திகள் வெளியான நிலையில், அதன்படி நடக்காதது தமிழர்களின் மனங்களை காயப்படுத்தியுள்ளது.


 

 

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடுவதென தலைமை நீதிபதி முடிவெடுத்தது உண்மையாகவே புரட்சிகரமான நடவடிக்கை ஆகும். அதற்காக தலைமை நீதிபதியை எவ்வளவு பாராடினாலும் தகும். அதேநேரத்தில் தீர்ப்புகளை மொழிபெயர்ப்பதில் உலகின் மூத்த மொழிகளில் ஒன்றானதும், உச்சநீதிமன்றத்திற்கு அதிக வழக்குகளை அனுப்பும் மாநிலத்தின் மொழியானதுமான  தமிழுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்க வேண்டும். முதல்கட்ட மொழிபெயர்ப்பு தீர்ப்புகளில் தமிழ் இடம் பெறாத நிலையில், தமிழ்நாடு சார்ந்த முக்கிய வழக்குகளின் தீர்ப்புகளை விரைந்து தமிழில் மொழிபெயர்த்து உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors appeared in the office of the ed

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் இன்று (25.04.2024) அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ளனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.