தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவிருக்கிறது. இந்தச் சூழலில், தமிழகத்தின் இருபெரும் கட்சிகளும் தமிழகம் முழுவதும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றது. இதில், அக்கட்சித் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்தும் அக்கட்சியின் முன்னணித் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்தும், தேர்தல் களத்தில் அனல் பறக்கச் செய்கிறது.
இந்நிலையில், திமுகவின் இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ எனும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார். சமீபகாலமாக இவர், “திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்துசெய்யப்படும்” என்று கூறிவருகிறார்.
உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வை ரத்துசெய்வோம் எனக் கூறி வருவதை விமர்சித்து, பாஜக சார்பில் நடிகை காயத்ரி ரகுராம் ட்வீட் செய்ததுள்ளார். அதில், “நீட் தேர்வை எந்த நிலையிலும் ரத்து செய்யமுடியாது என உச்சநீதிமன்றம் உறுதியாகவும், இறுதியாகவும் சொல்லிவிட்டது. அதன்பிறகும் ஊர் ஊராகச் சென்று, நாங்கள் நீட் தேர்வை ரத்து செய்வோம் என உதயநிதி கூறி வருகிறார். அப்படிச் செய்ய முடியாவிட்டால் அரசியலை விட்டு விலகத் தயாரா? நீட் தேர்வுக்கு, காங்கிரஸுடன் கூட்டு சேர்ந்து கையெழுத்திட்டது துரோகிகளான நீங்கள், இன்னும் எத்தனை காலம்தான் ஏழை எளிய மாணவர்களை ஏமாற்றுவீர்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.