Skip to main content

'கடவுள்களுக்கு நன்றி'- அமைச்சர் பொன்முடிக்கு ஷாக் கொடுத்த நீதிபதி சந்திரசூட்

Published on 06/11/2023 | Edited on 06/11/2023

 

The Supreme Court dismissed the case filed by Minister Ponmudi

 

தமிழ்நாட்டில் 1996 முதல் 2001ம் ஆண்டு வரை நடந்த திமுக ஆட்சி காலகட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பொன்முடி இருந்தார். அந்த நேரத்தில் அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2002ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி உட்பட மேலும் ஐந்து பேர் சேர்க்கப்பட்டிருந்தனர்.

 

விழுப்புரத்தில் நடந்து வந்த இந்த வழக்கு விசாரணை வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. இறுதியில் கடந்த ஜூன் 28ம் தேதி போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி நீதிமன்றம் அவர்கள் அனைவரையும் இந்த வழக்கில் இருந்து விடுவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தார். மேலும், இந்த வழக்கை மறு ஆய்வு செய்து தாமே விசாரிப்பதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்திருந்தார்.

 

இதை எதிர்த்து அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை விசாரிக்க தடையில்லை என உத்தரவிட்டதோடு, தாமாக முன்வந்து விசாரிக்கும் ஆனந்த் வெங்கடேஷ் போன்ற நீதிபதிகள் நீதித்துறையில் உள்ளதற்கு கடவுள்களுக்கு நன்றி என கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சர் பொன்முடி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

காமராஜர் பிறந்த மாவட்டத்திலும் காலை உணவுத் திட்ட தொடக்க விழா! அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு!

Published on 15/07/2024 | Edited on 15/07/2024

 

உலகிற்கே முன்னோடி திட்டமாக அமைந்துள்ளதாகக் கூறப்படும்  முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை,  பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில், திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்திலுள்ள புனித அன்னாள் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதனைத் தொடர்ந்து, இத்திட்டத்தினை விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், கல்லூரணி எஸ்.பி.கே. தொடக்கப்பள்ளியில் அமைச்சர் தங்கம் தென்னரசு துவங்கி வைத்து மாணவர்களுடன் உணவருந்தினார்.

பெருந்தலைவர் காமராஜரின் 122வது பிறந்ததினத்தை முன்னிட்டு, விருதுநகர் மதுரை சாலையிலுள்ள காமராஜர் நூற்றாண்டு நினைவு மணிமண்டபத்தில், அன்னாரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும், தக்கம் தென்னரசுவும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்வில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப.,   விருதுநகர் எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், விருதுநகர் நகர்மன்றத் தலைவர் மாதவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ராஜபாளையம் தொகுதியிலும் தளவாய்புரம் ஊராட்சி பு.மூ.மா.அம்மையப்ப நாடார் ஆரம்பப் பள்ளி மற்றும் கிருஷ்ணாபுரம் பெருந்தலைவர் காமராஜர் இந்து நாடார் தொடக்கப்பள்ளி போன்ற பள்ளிகளில், ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் தொடங்கிவைத்து, குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவைச் சாப்பிட்டார். ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள காமராஜர் திருவுருவச் சிலைக்கு தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாகர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த விருதுநகர் மாவட்டத்திலும் அவருடைய பிறந்தநாள் விழா மற்றும் காலை உணவுத்திட்டத்தின் தொடக்க விழாவை சிறப்புடன் நடத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ. போன்ற மக்கள் பிரதிநிதிகள் கர்மவீரருக்கு புகழ் சேர்த்துள்ளனர். 

Next Story

வெற்றி பெற்றதற்கான சான்றிதழைப் பெற்றுக்கொண்ட அன்னியூர் சிவா!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
Anniyur Siva receiving the certificate of success

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்குக் கடந்த 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட்டனர். அதோடு 11 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேட்சைகள் என மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்திலிருந்தனர். அதிமுக, தேமுதிக ஆகிய இருகட்சிகளும் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணித்திருந்தது.

இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (13.07.2024) எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. இந்நிலையில் 20 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1 லட்சத்து 24 ஆயிரத்து 53 வாக்குகள் பெற்று 67 ஆயிரத்து 757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

Anniyur Siva receiving the certificate of success

இதனையடுத்து விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து பெற்றுக்கொண்டார். அப்போது அமைச்சர் பொன்முடி,  நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், விழுப்புரம் மாவட்ட திமுக பொறுப்பாளர் கௌதம் சிகாமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

அதே சமயம் பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56 ஆயிரத்து 26 வாக்குகளும், நாதக வேட்பாளர் அபிநயா 10 ஆயிரத்து 479 வாக்குகளும் பெற்றனர். இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்ட அபிநயா டெப்பாசிட்டை இழந்துள்ளார். திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி சான்றிதழைப் பெற்ற பின் அமைச்சர் பொன்முடி செய்தியாளரை சந்தித்து பேசுகையில், “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் காரணம். கடந்த 3 ஆண்டுகளில் திமுக அரசு நிறைவேற்றிய திட்டங்களால் வெற்றி பெற்றிருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.